வாக்கு, உரிமை மட்டுமல்லாமல் கடமையும் கூட…

தமிழகத்தில் உள்ள பொதுமக்களுக்கு பல காலமாக ஊழலற்ற, வளர்ச்சி திட்டங்களை முன்னெடுக்கும் ஒரு நல்ல ஆட்சி அமைய வேண்டும். வாழ்க்கைத்தரம் உயர வேண்டும் என ஆதங்கம் உண்டு. இது குறித்து டீக்கடை உள்ளிட்ட பொது இடங்களில் இவர்கள் பேசுகின்றனர், சமூக வலைத்தளங்களில் கருத்துகளை பகிர்கின்றனர். ஆனால் ‘ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது’ என்பது போல நாம் இது குறித்து எவ்வளவுதான் பேசினாலும், கருத்துகளை பதிவிட்டாலும் அது நடக்க வேண்டும் என்றால் அதற்கு நாம் சற்று மெனக்கெட்டுத்தான் ஆக வேண்டும்.

நம் எண்ணங்கள் ஈடேற ஒரே வழி அது ஓட்டாக மாறி தகுதியானவர்களை சென்றடைய வேண்டும். அதற்கு தேர்தலுக்கு முன்பாகவே நம் வாக்காளர் அடையாள அட்டை சரிபார்க்கப்பட்டு பெயர் மாற்றம் உள்ளிட்ட திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட வேண்டும். ஓட்டுப்பதிவு அன்று நம் ஓட்டை தவறாமல் போட வேண்டும். நம் ஓட்டும், இறந்த சுற்றத்தாரின் ஓட்டும் கள்ள ஓட்டாக மாறாமல் இருக்க நாம்தான் முயற்சிக்க வேண்டும். இது நமது கடமை.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் நவம்பர் 16-ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு டிசம்பர் 15 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்ற திருத்தங்களை மேற்கொள்ளலாம் என தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதை வீணாக்காமல் பயன்படுத்தி நம் கடமையை செய்வோம். சரியானவர்களை தேர்ந்தெடுப்போம். தமிழகத்தை காப்போம், தேசத்தை முன்னேற்றுவோம்.