வாக்கு இயந்திரத்தை உடைத்த வேட்பாளரை பிடிக்க 8 தனிப்படைகள்: ஆந்திர தலைமை தேர்தல் அதிகாரி

ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டம், மாசர்லா சட்டப்பேரவை தொகுதியில் கடந்த 13-ம் தேதிவாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ்கட்சியின் வேட்பாளர் ராமகிருஷ்ணா தனது ஆதரவாளர்களுடன் பாலய்யா கேட் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடிக்கு சென்றார். “இந்த வாக்குச்சாவடியில் எனக்கு எதிராக வாக்குப்பதிவு நடைபெறுவதாக தகவல் வந்தது. என்னை தோற்கடிக்க போகிறீர்களா?” என ஆவேசமாக கேட்டவாறு, அங்கிருந்த வாக்கு இயந்திரத்தை தரையில் போட்டு உடைத்தார்.

அப்போது, வாக்களிக்க வரிசையில் இருந்த மக்கள் பயத்தில் அங்கிருந்து தப்பியோடினர். ராமகிருஷ்ணா அத்தொகுதியில் தொடர்ந்து 4 முறை எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றவர். அவரே இப்படி கீழ்த்தரமாக நடந்து கொண்டது குறித்து மக்கள் விமர்சித்தனர். இதனை அங்கிருந்த சிலர் வீடியோஎடுத்தனர். தேர்தல் முடிந்த பிறகு,மறுநாள் மாசர்லாவில் ராமகிருஷ்ணாவின் ஆதரவாளர்கள் தீவிரமான வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் அங்கு கண்ணீர் புகைகுண்டு வீச்சு, துப்பாக்கிச் சூடு, தடியடி போன்ற சம்பவங்கள் நடந்தன.

 

இந்நிலையில், வாக்குப்பதிவு இயந்திரத்தை எம்எல்ஏ தரையில் போட்டு உடைத்த வீடியோ பரவதொடங்கியதையடுத்து அதுகுறித்து நடவடிக்கை எடுக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதனை தொடர்ந்து மத்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் ராமகிருஷ்ணாவை கைது செய்ய ஆந்திர மாநில போலீஸ் டிஜிபி உத்தரவிட்டார். இதனை முன்கூட்டியே அறிந்துகொண்ட ராமகிருஷ்ணா தனதுஇரு சகோதரர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் ஹைதராபாத்துக்கு தப்பிச் சென்றார். ஆந்திர தலைமை தேர்தல் அதிகாரி முகேஷ்குமார் மீனா செய்தியாளர்களிடம் பேசுகையில், “தலைமறைவாக உள்ள ராமகிருஷ்ணாவை பிடிக்க எஸ்பி,டிஎஸ்பி தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கண்டிப்பாக அவரை நாங்கள் கைது செய்வோம். சம்பவத்தன்று கடமையை சரிவர செய்ய தவறியவாக்குச்சாவடி தேர்தல் அதிகாரி மற்றும் துணை தேர்தல் அதிகாரி ஆகிய இருவரை சஸ்பெண்ட் செய்துள்ளோம். வாக்குச் சாவடியின் கண்காணிப்பு கேமராவில் பதிவான அந்த வீடியோ எப்படி வெளியில் கசிந்தது என்பதையும் நாங்கள் விசாரித்து வருகிறோம்.

மாநிலம் முழுவதும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள வாக்கு இயந்திர மையங்களை 25-ம் தேதி முதல் பார்வையிட போகிறேன். வாக்கு எண்ணிக்கை குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் காணொலி மூலம் ஏற்கெனவே ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது” என்றார். இந்நிலையில், முன் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் பின்னெல்லி ராமகிருஷ்ணா ரெட்டி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.