வரும் 23ல் பா.ஜ., போராட்டம்

”தமிழக அரசை கண்டித்து வரும் 23ம் தேதி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள வார்டுகளிலும், ஊராட்சிகளிலும் போராட்டம் நடத்தப்படும்,” என, தமிழக பா.ஜ., துணை தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்தார்.

சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி: ‘என் மண், என் மக்கள்’ பாத யாத்திரையில், முதலில் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் அண்ணாமலை பங்கேற்பதாகவும், மற்ற இடங்களில் கட்சியின் மற்ற தலைவர்கள் பங்கேற்பதாகவும் இருந்தது. ஆனால், பாத யாத்திரையில் பங்கேற்க, இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். வெளிநாடுகளில் இருந்தும், பலர் பங்கேற்க வருவதாக தெரிவித்து உள்ளனர். எனவே, தமிழகம் முழுதும் பாத யாத்திரையில், அண்ணாமலை பங்கேற்க உள்ளார். இது, வரும் 28ம் தேதி, ராமேஸ்வரத்தில் துவங்குகிறது. மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் ஏற்பட்டிருக்கும் தடை, ஜல்ஜீவன் திட்டம் உட்பட மத்திய அரசின் திட்டங்களில் முறைகேடுகள் நடக்கின்றன. இவற்றை கண்டித்து, வரும் 23ம் தேதி அனைத்து வார்டுகளிலும், ஊராட்சிகளிலும் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.