கும்பகோணம் அருகிலுள்ள கோவிந்தபுரத்தில் அகில பாரதத் துறவியர் மாநாட்டில் ஆசியுரை வழங்கி துறவியர், ஹிந்து அமைப்புகளின் பிரமுகர்கள் தெரிவித்த கருத்துகள்:
சென்னை ராமகிருஷ்ண மடத்தின் மேலாளர் சுவாமி விமூர்த்தானந்தர்: ஹிந்துக்களிடம் ஒற்றுமை இல்லை என்று கூறுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். வேற்றுமைக்கு ஆளாகாமல், ஒற்றுமையாக இணைந்து செயல்படுங்கள். மற்ற மதத்தை வளர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. ஆனால், ஹிந்து மதம் தானாகவே வளர்ந்து கொண்டு வரும் மதம். அது வளர வேண்டிய சூழ்நிலையை உருவாக்குவோம். மற்ற நாடு வளர்ந்தால் சுற்றியுள்ள நாடுகளுக்குத்தான் ஆபத்து. ஆனால் இந்தியா வளர்ந்தால் உலகமே வளரும்.
மன்னார்குடி சம்பத்குமார ராமானுஜ ஜீயர்: பசும்பால் அமிர்தம், அது சர்வரோக நிவாரணம் தரக்கூடியது. ஆனால், இன்று நாம் பால் வடிவத்தில் விஷத்தை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். மாட்டைக் காத்தால்தான், நாட்டைக் காக்க முடியும்.
ஸ்ரீஸ்ரீரவிசங்கர்: பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பாரம்பரியமிக்க நம்முடைய பண்பாடு, ஆன்மிகம் வளர்ச்சி அடைந்து தற்போது நிலை கொண்டுள்ளது. இதை மக்கள் சரியாக புரிந்து கொள்ளாததால் அறத்திலிருந்து விலகிச் செல்கின்றனர். ஜாதிக் கலவரத்தை முடிவுக்குக் கொண்டுவர ஆன்மிகவாதிகளால்தான் முடியும். எனவே, மக்களுக்காகத் துறவியர்கள் பணியாற்ற வேண்டும்.
விஸ்வ ஹிந்து பரிஷத்தின் அகில பாரத பொதுச் செயலர் சம்பத்ராய்: உலகில் பல்வேறு நாடுகளில் வன்முறைகள் நிகழ்ந்தாலும், நம் தேசம் ஆன்மிக பலத்துடன் இருப்பதால், இங்கு அதுபோன்ற பிரச்சினைகள் இல்லை. இருப்பினும் துறவியர்கள் சமுதாய விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்.
ஹிந்து முன்னணி நிறுவனர் ராம. கோபாலன்: ஹிந்து சமுதாயத்தை காப்பாற்ற வாக்கு வங்கி முறையை ஏற்படுத்த வேண்டும்.
கோவை பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார்: பெரும்பான்மை ஹிந்து மக்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுவதில்லை. பிற சமுதாயத்துக்கு சலுகைகளை வாரி வழங்கக் காரணம் வாக்குவங்கிதான். நாமும் வாக்குவங்கியை பலப்படுத்திட வேண்டும்.
கௌமார மடம் குமரகுருபர அடிகளார்: சமய நம்பிக்கை இல்லாதவர்கள்தான் கோயில் அறங்காவலராக உள்ளனர். அவர்களுக்கு சமயநெறியும் பண்பாடும் தெரியவில்லை. இந்த நிலை மாற வேண்டும்.
திருவாவடுதுறை ஆதீனம்: காசியைவிட புண்ணியத் தலமான கும்பகோணம், மகாமகத்தின்போது இங்கு நீராடினால் தீமைகள் எல்லாம் விலகும்.
குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்: கடந்த தலைமுறையினர் இறை நம்பிக்கையைப் போற்றி பாதுகாத்தனர். அதை இன்றைய தலைமுறையினர் எண்ணிப் பார்க்க வேண்டும்.