புயல் – வெள்ளம் பாதித்த சில பகுதிகளில் நிவாரணப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மாணவர்கள் நலன் கருதி நாளை (டிச.7 – வியாழக்கிழமை) சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் சென்னை, மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு டிச.4 முதல் டிச.6 வரை தமிழக அரசு விடுமுறை அறிவித்திருந்தது. புயல் வெள்ளம் பாதித்த சில பகுதிகளில் நிவாரணப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மாணவர்கள் நலன் கருதி, நாளை (டிச.7) சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது, என்று அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களை கடந்த சில நாட்களாக புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயல் நேற்று மாலை ஆந்திர மாநிலம், பாபட்லா அருகே 110 கி.மீ. வேகத்தில் கரையைக் கடந்தது. சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை, வெள்ளம் ஓய்ந்தாலும் கூட சில பகுதிகளில் இன்னும் வெள்ள நீர் வடியாததால் மக்கள் முடங்கியுள்ளனர்.சென்னையில் வேளச்சேரி, பள்ளிக்கரணை, வியாசர்பாடி, வண்ணாரப்பேட்டை, ஒக்கியம் துரைப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்தில் மேற்கு தாம்பரம் ஆகிய பகுதிகளில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (டிச.6) காலை நிலவரப்படி சென்னை வேளச்சேரியில் மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் தனியார் படகுகள் மூலம் மக்கள் வெளியேறி வருகின்றனர். குடிதண்ணீர், பால், உணவு போன்ற அத்தியாவசியப் பொருட்களைப் பெற முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் மின்சாரம், செல்போன் சேவை இன்னும் கிடைக்கவில்லை. ஒருசில பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொட்டலங்களை வழங்கும் பணி தற்போதுதான் தொடங்கியுள்ளது. ராணுவம் இந்தப் பணியை மேற்கொண்டுள்ளது.
இதனிடையே, மிக்ஜாம் புயலால் கனமழை வெளுத்து ஓய்ந்த நிலையிலும் சென்னையில் வேளச்சேரி, பள்ளிக்கரணை, வியாசர்பாடி, வண்ணாரப்பேட்டை, ஒக்கியம் துரைப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்தில் மேற்கு தாம்பரம் ஆகிய பகுதிகளில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். | முழுமையாக வாசிக்க > புயல், மழை ஓய்ந்தும் வெள்ளம் வடியாமல் தவிக்கும் வேளச்சேரி, வியாசர்பாடி, முடிச்சூர், மேற்கு தாம்பரம் மக்கள்
அதேவேளையில், தமிழகம், ஆந்திராவில் பலத்த சேதங்களை ஏற்படுத்திய மிக்ஜாம் புயல் வலுவிழந்துவிட்டதாகவும், இருப்பினும் இன்றும் (டிச.6) ஒரு சில மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5,060 கோடி கோரும் தமிழக அரசு: முன்னதாக, தமிழகத்தில் ‘மிக்ஜாம்’ புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களை சீர்செய்திட இடைக்கால நிவாரணமாக ரூபாய் 5,060 கோடி வழங்கிடக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதத்தை திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, பிரதமரை நேரில் சந்தித்து வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவிக்கும் மக்கள்: புயல், அதிகனமழை காரணமாகபாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்பட்டது. மழை காரணமாக, பல துணைமின் நிலையங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அதேபோல், புறநகர்பகுதிகளில் சில இடங்களில் மரகிளைகள் முறிந்து மின்சார கம்பிகள் மீது விழுந்துள்ளன. மின்வாரியம் தரப்பில் 15 ஆயிரம்பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மழைவிட்டதும் படிப்படியாக மின்விநியோகம் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. | முழு விவரம்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 2 நாட்களாக மின்சாரம் இன்றி தவிக்கும் மக்கள்: செல்போன், இணையதள சேவை பாதிப்பு
இதனிடையே, சென்னையில் நிலவும் கடும் பால் தட்டுப்பாடு காரணமாக கூடுதல் விலைக்கு யாரேனும் பால் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்