வக்பு என்ற வார்த்தை பரவலாக உச்சரிக்கப்படுகிறது. இந்த அரபி வார்த்தைக்கு சொத்தை வைத்துக் கொண்டிருத்தல் என்று பொருள். இது உடைமையின் குறியீடு. வக்பு விவகாரம் பல நூற்றாண்டுகளை கடந்துள்ளது. சுல்தான்களும், முகலாயர்களும் பாரதப் பகுதிகளை ஆக்கிரமித்து ஆட்சி நடத்திய காலத்திலேயே வக்பு என்ற பெயரில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. தானமாக கொடுக்கப்பட்ட நிலத்துடன் பக்கத்திலிருந்த நிலங்களும் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டன. வக்பு சொத்தை நிர்வகிப்பவர் முத்தவல்லி. இதை கண்காணிப்பவர் காஜி.
1810ல் பெங்காலிலும், 1817ல் மதராஸ் ராஜதானியிலும் இது அமலாக்கப்பட்டது. 1863ல் இதுதொடர்பான பொதுச் சட்டம் கொண்டு வரப்பட்டது. 19ம் நூற்றாண்டில் பிரிவி கவுன்சிலுக்கு வக்பு விவகாரம் கொண்டு செல்லப்பட்டது. நீதிபதிகள் பிரபு வாட்சன், பிரபு காப்ஹவுஸ், பிரபு ஷாந்த், சர் ரிச்சர்ட் கவுச் ஆகியோர் வக்பு முறையை கடுமையாக சாடியதுடன் இது செல்லாது என்றும் அறிவித்தனர். ஆனால் இதை எதிர்த்து முஸ்லிம்கள் தொடர்ந்து குரல் எழுப்பினார்கள்.
முஸ்லிம்களை திருப்திபடுத்த 1913ல் சட்டம் கொண்டு வரப்பட்டது. பிறகு 1954ல் முஸ்லிம்கள் கூடுதலாக தாஜா செய்யப்பட்டார்கள். 1995, 2013 ஆகிய ஆண்டுகளிலும் இதுதான் மீண்டும் மீண்டும் அமலாக்கப்பட்டது. நாளுக்கு நாள் முஸ்லிம்களை தாஜா செய்வது அதிகரித்ததே தவிர குறையவில்லை.
சுதந்திர பாரதத்தில் 1954ல் வக்பு சட்டம் கொண்டு வரப்பட்டபோதே அதற்கு எதிர்ப்பு எழுந்தது. ஏனென்றால் ஹிந்துக்களுக்கோ, கிறிஸ்தவர்களுக்கோ இதைப்போல எந்த சட்டமும் கொண்டு வரப்படவில்லை.
1863ல் மதரீதியான உடைமைகளை நிர்வாகிப்பது தொடர்பாக பிரிட்டிஷ் ஆட்சியில் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஹிந்து கோயில்கள் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட இது வழிவகை செய்தது. சுதந்திர பாரதத்திலும் இது உறுதிப்படுத்தப்பட்டது.
வக்பு சட்டம் தொடர்பாக வெவ்வேறு நீதிமன்றங்களில் அவ்வப்போது வழக்குகள் தொடுக்கப்பட்டன. விதிமுறைகள் வக்பு நிர்வாகிகளுக்கு சாதகமாகவே இருந்ததால், உண்மையாகவே பாதிக்கப்பட்டவர்கள் கூட நியாயம் பெற முடியாத நிலையே தொடர்ந்து நீடித்து வந்தது. எனினும் சில விதிவிலக்கான நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளன என்பதை குறிப்பிடாமல் இருக்க முடியாது. உதாரணமாக ஹைதராபாத்தில் உள்ள ஹோட்டல் மேரியாட்ஸ் தங்களது நிலத்தின் மீது கட்டப்பட்டுள்ளது என தெலுங்கானா வக்பு வாரியம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. ஆனால் இதை தெலுங்கானா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
தமிழகத்தில் திருச்சி மாவட்டத்தில் உள்ள திருச்செந்துறை கிராமம் முழுவதையும் வக்பு வாரியம் எடுத்துக் கொண்டது. அந்த ஊரில் யாரும் நிலம் வாங்கவும், விற்கவும் முடியாத நிலை ஏற்பட்டது. இந்த வக்பு வாரியத்தால் எல்லா ஊருக்கும் இதே நிலைமைதான் ஏற்படும்.
இந்நிலையில்தான் வக்பு வாரியத்தை முறைப்படுத்த வேண்டும் என்பதற்காக மத்திய அரசு புதிய மசோதாவை கொண்டு வந்துள்ளது. இது இப்போது நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் பரிசீலனையில் உள்ளது. இதன் பரிந்துரை அடிப்படையில் அடுத்தகட்ட நகர்வு மேற்கொள்ளப்படும்.
ஆர்கனைசர் ஆங்கில வார இதழிலிருந்து தமிழில் : நிகரியவாதி