சிறுமிகளை இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக துஷ்பிரயோகம் செய்த வழக்கில், கர்நாடக மாநிலத்தின் சித்ரதுர்காவில் உள்ள முருகா மடத்தைச் சேர்ந்த சிவமூர்த்தி முருக சரணருக்கு எதிராக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிவமூர்த்தி முருக சரணர் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் லஹர் சிங் சிரோயா, “இது மிகவும் அதிர்ச்சிகரமான, சோகமான நிகழ்வு. இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கும்போது அது நமது சொந்த மக்கள் மீதான நம்பிக்கையை உலுக்குகிறது. ஒரு சமூகமாக, இந்தக் குற்றச்சாட்டுகள் மீது முழுமையாகவும் பாரபட்சமின்றியும் விசாரிப்பதற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம். இந்த வழக்கில் இழுபறிகள், அழுத்தங்கள், அரசியல் மற்றும் தலையீடுகள் எதுவும் இல்லை என்பதை கர்நாடக அரசும், அனைத்து அரசியல் கட்சிகளும் உறுதி செய்ய வேண்டும். சிறுமிகளுக்கு நீதியை நிலைநாட்ட வேண்டும். இந்த விஷயத்தில், உணர்வுகள் மட்டுமல்ல, நம் சமூகத்தின் ஆரோக்கியத்தில் நம்பிக்கையை மீட்டெடுப்பதும் முக்கியம். அந்த வகையில் நாம் அனைவரும் முக்கிய பங்கு வகிக்க வேண்டும்,”என்றார். இதற்கிடையில், மடத்தின் வழக்கறிஞர் விஸ்வநாத், “நான் சுவாமிஜியுடன் நேற்று இரவு 11.30 மணி வரை தங்கியிருந்தேன். அவர் எங்கு சென்றார் என்பது குறித்து எனக்கு எந்தத் தகவலும் இல்லை. என்னிடம் தன் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். மடத்துக்கு பக்தர்கள் வருகை தருகின்றனர். ஒருவேளை அவர் சட்ட ஆலோசனை பெறச் சென்றிருக்கலாம். வழக்கு குறித்து முழுமையான அறிக்கை கிடைக்கவில்லை. இந்த வழக்குக்கு எந்த சட்ட கட்டமைப்பும் இல்லை ”என்று கூறினார். முன்னதாக, இந்த மாத தொடக்கத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கட்சியினருடன் சித்ரதுர்காவில் உள்ள முருகா மடத்துக்குச் சென்றார். ராகுலுக்கு சுவாமி சிவமூர்த்தி முருக சரணர்தான் லிங்கதீட்சை வழங்கினார். இது ஒரு நபரை லிங்காயத் பிரிவிற்கு அழைக்கும் அதிகாரப்பூர்வ நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.