லாக்ராஞ்சியன் பாயின்ட் என்ற இடத்தில் ஆதித்யா விண்கலம் நிலை நிறுத்தப்பட்டுள்ளதால், அங்கிருந்தபடி, சூரியனை 24 மணி நேரமும் கண்காணிக்க முடியும் என்று சேலம் புத்தகத் திருவிழாவில், இஸ்ரோவின் ஆதித்யா எல்-1 திட்ட இயக்குநர் நிகர் ஷாஜி தெரிவித்துள்ளார். சேலத்தில் நடைபெற்று வரும் சேலம் புத்தகத் திருவிழாவில், முதன்மை விருந்தினர்களைக் கொண்டு தினமும் கருத்துரை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில், ‘விண்வெளிப் பயணத்தின் சவால்கள்’ என்ற தலைப்பில், இஸ்ரோவின் ஆதித்யா எல்- 1 திட்ட இயக்குநர் நிகர் ஷாஜி கலந்து கொண்டு, பள்ளி மாணவர்களிடம் கலந்துரையாடினார்.
மாணவர்களுக்கு பதிலளித்து நிகர் ஷாஜி கூறியது: சூரியனை ஆய்வு செய்வதற்காக விண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஆதித்யா எல்-1 விண்கலம் மூலம் சூரியனின்வெப்ப சூழல், கதிர் வீச்சு, காந்தப்புயல் ஆகியவை குறித்து ஆய்வு செய்ய முடியும். பூமிக்கும், சூரியனுக்கும் இடையிலான பகுதி ஈர்ப்பு விசை சமமாக இருக்கக் கூடிய லாக்ராஞ்சியன் பாயின்ட் என்ற இடத்தில் ஆதித்யா விண்கலம் நிலை நிறுத்தப்பட்டுள்ளதால், அங்கிருந்தபடி, சூரியனை 24 மணி நேரமும் கண்காணிக்க முடியும்.
இயற்கை பேரிடர்கள் கணிப்பு: இதன் மூலம் பல்வேறு இயற்கைபேரிடர்களை கணிக்க முடிவதுடன், விண்வெளியில் உள்ள விண்கலங்களுக்கு, வெப்ப கதிர் வீச்சால் பாதிப்பு ஏற்படுவதையும் தடுக்க முடியும். சந்திரயான்-3 விண்கலம் நிலவின் தென்துருவப் பகுதியில் மென்மையான தரையிறக்கம் செய்யும் ஆய்வு வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. இஸ்ரோ பல்வேறு விண்வெளி திட்டங்கள் மூலம் பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது என்றார். நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அலர்மேல் மங்கை, மகளிர் திட்ட இயக்குநர் பெரியசாமி மற்றும் அரசு, தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.