விஷ்வ ஹிந்து பரிஷத்தின் மத்திய செயல் தலைவரும் மூத்த வழக்கறிஞருமான அலோக் குமார், ரோஹிங்கியாக்களை அகதிகளாகக் குறிப்பிடும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்துள்ளார். “மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கடந்த 10.12.2020 அன்று பாரதத்தில் ரோஹிங்கியாக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டார்கள் என்று நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தார். ரோஹிங்கியாக்கள் அகதிகள் அல்ல. அவர்கள் ஊடுருவல்காரர்கள் என்பதே எங்களின் நிலையான நிலைப்பாடு என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. ஆனால், இன்று, மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் பூரியின் அறிக்கையைப் பார்த்து நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். நகர்ப்புற மேம்பாட்டு அமைப்பு, ரோஹிங்கியாக்களை அகதிகள் என்று கூறி பக்கர்வாலாவில் உள்ள இ.டபிள்யு.எஸ் குடியிருப்புகளை அவர்களுக்கு ஒதுக்கியுள்ளது. டெல்லியின் மஜ்னுகா திலா பகுதியில் பாகிஸ்தானில் இருந்து வந்துள்ள ஹிந்து அகதிகள், மிகவும் தாழ்ந்த நிலையில் தொடர்ந்து வசித்து வருகின்றனர். ஆனால், ரோஹிங்கியாக்களுக்கு அரசு வழங்கிவரும் வரப்பிரசாதத்தை அதிகப்படுத்தியுள்ளது. மத்திய அரசு இந்தப் பிரச்சினையை மறுபரிசீலனை செய்யுமாறு வி.எச்.பி வலியுறுத்துகிறது. ரோஹிங்கியாக்களுக்கு வீடுகளை வழங்குவதற்குப் பதிலாக அவர்களை பாரதத்திற்கு வெளியே அனுப்புவதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என கோரிக்கை விடுக்கிறது” என கூறியுள்ளார்.