ரூ.8.30 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் மீண்டும் உலக பணக்காரர் பட்டியலில் அதானி

தலைவருமான கவுதம் அதானி, உலக பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் இடம் பிடித்தார். சரிவில் இருந்து மீண்டு, 100 பில்லியன் டாலர் கிளப் பட்டியலில் மறுபடியும் இணைந்துஉள்ளார். கடந்தாண்டு ஜனவரி மாதம் ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான பின் அதானியின் சொத்து மதிப்பு கடும் சரிவைக் கண்டது.

இந்நிலையில், ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியாகி கிட்டத்தட்ட ஓராண்டுக்கு பின், தொழில்அதிபர் கவுதம் அதானியின் சொத்து மதிப்பு மீண்டும் 8.30 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. தற்போது, அதானியின் சொத்து மதிப்பு 22,400 கோடி ரூபாய் அதிகரித்து 8.36 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த ஓர் ஆண்டில் இதுவே அதானியின் அதிகபட்ச சொத்து மதிப்பாகும்.

இதைத்தொடர்ந்து, உலகின் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானிக்கு அடுத்ததாக, அதானி 12வது இடத்தில் உள்ளார். அம்பானியின் சொத்து மதிப்பு இந்த மாத துவக்கத்தில் சாதனை உச்சத்தை அடைந்த நிலையில், அதானியின் சொத்து மதிப்பு கடந்த 2022ம் ஆண்டு உச்சத்துடன் ஒப்பிடுகையில் 4.15 லட்சம் கோடி ரூபாய் குறைவாகவே உள்ளது. ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து அதானியின் சொத்து மதிப்பு, 6.60 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக சரிவைக் கண்டது. அவரது குழுமமும் சந்தை மதிப்பில் 12.45 லட்சம் கோடி ரூபாயை இழந்தது.

இதைத் தொடர்ந்து முதலீட்டாளர்களையும், கடன் கொடுத்தவர்களையும் சமாதானப்படுத்தும் முயற்சியாக, கடனை முன்கூட்டியே திருப்பிச் செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அதானி குழுமம் மேற்கொண்டது. கடந்தாண்டு உலகிலேயே அதிகபட்சமாக சொத்து மதிப்பை இழந்தவராக இருந்த அதானி, நடப்பாண்டில் இதுவரை உலகப் பணக்காரர்களிலேயே அதிகபட்சமாக, 1.36 லட்சம் கோடி ரூபாய் கூடுதல் மதிப்பை பெற்று உள்ளார்.