ராமர் கோவில் கும்பாபிஷேகம் 11 நாள் விரதம் துவக்கினார் பிரதமர்

உத்தர பிரதேசத்தின் அயோத்தியில், வரும் 22ம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடக்கவுள்ள நிலையில், அதற்கு முன் பின்பற்றப்பட வேண்டிய, 11 நாள் விரதம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளை பிரதமர் நரேந்திர மோடி துவங்கினார்.

இது குறித்து பேசிய அவர், ”வாழ்க்கையில் இப்படி உணர்ந்ததே இல்லை,” என, மிகவும் உருக்கமாக தெரிவித்தார்.

உபி.,யின் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேகம், வரும் 22ம் தேதி நடக்கவுள்ளது. இதில், பிரதமர் மோடி பங்கேற்கஉள்ளார். இதை முன்னிட்டு, ‘யாம் நியாம்’ என்ற 11 நாட்கள் சிறப்பு சடங்குகளை பிரதமர் மோடி நேற்று துவங்கினார். இந்த நாட்களில், வேதங்கள் வகுத்துள்ள கடுமையான வழிகாட்டுதல்களை அவர் கடைப்பிடிக்க உள்ளார். ஆன்மிக குருக்கள் அளித்த அறிவுரைகளின்படி, இந்த கடுமையான சிறப்பு சடங்குகளை செய்வது என, பிரதமர் மோடி உறுதியாக முடிவு செய்து உள்ளார்.

 

இந்த நாட்களில், சூரிய உதயத்திற்கு முன் விழித்தல், யோகா மற்றும் தியானம் செய்தல், குறிப்பிட்ட உணவுகளை உட்கொள்ளுதல் போன்ற கட்டுப்பாடுகளை பிரதமர் மோடி பின்பற்ற உள்ளார். கடவுள் ராமர் அதிக நேரம் செலவிட்டதாகக் கருதப்படும் மஹாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில், இந்த சிறப்பு சடங்குகளை பிரதமர் மோடி நேற்று துவங்கினார்.

 

இது குறித்து, அவர் வெளியிட்ட ஆடியோ செய்தியில் கூறியதாவது: நான் இப்போது மிகவும் உணர்ச்சிவசப்பட்டு இருக்கிறேன். என் வாழ்க்கையில் முதன்முறையாக, இது போன்ற உணர்வுகளை அனுபவிக்கிறேன். ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்பது, என் அதிர்ஷ்டம். இதற்காக, புனித நுால்கள் மற்றும் துறவியரின் வழிகாட்டுதலின்படி கடுமையான விரதங்களை பின்பற்றி வருகிறேன்.

 

நான் மேற்கொள்ளும் உள்ளார்ந்த பயணத்தை உணர மட்டுமே முடியும்; வெளிப்படுத்த முடியாது. உணர்வுகளின் ஆழம் மற்றும் தீவிரத்தை, வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது. இந்த புனிதமான தருணத்தில், அனைத்து இந்தியர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு கருவியாக கடவுள் என்னை தேர்ந்தெடுத்துள்ளார்.

 

இவ்வாறு அவர் உருக்கமாக கூறினார்.