ஏற்கனவே இந்த வழக்கின் விசாரணை நடந்து கொண்டிருந்த காலத்திலேயே ராமர் கோவிலுக்கான கட்டுமான பொருட்களை ராமஜென்மபூமி நியாஸ் அமைப்பினர் சேகரித்து வந்தனர். இதற்காக நாடு முழுவதிலும் இருந்து பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் கோவிலுக்கான தூண்களை தயார் செய்யும் பணிகளும் முழுவீச்சில் நடந்து வந்தது. 270 அடி நீளம், 128 உயரம், 140 அடி அகலத்தில் பிரமாண்டமான முறையில் கோவில் அமைய உள்ளது. முற்றிலும் கைவேலைப்பாடுகள் நிறைந்த சலவைக்கற்கள் மூலம் கட்டப்பட உள்ள இந்த கோவிலில் 5 வாசல்கள், 212 தூண்கள் அமைக்கப்படுகின்றன. இரும்பை பயன்படுத்தாமல் இந்த கோவில் கட்டப்படுவது தனித்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
கோவிலுக்கான தூண்களில் பாதிக்கு மேல் ஏற்கனவே தயார் நிலையில் இருக்கும் நிலையில், மீதமுள்ள தூண்களையும் சலவைக்கல்லில் செதுக்கும் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன. தற்போது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வெளியாகி இருக்கும் நிலையில் இந்த பணிகள் வேகமெடுத்து உள்ளன. இதற்கு 4 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என கருதப்படுகிறது.
ராமர் கோவில் கட்டுமானப்பணிகள் குறித்து விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச செயல் தலைவர் அலோக் குமார் கூறும்போது, ‘கோவில் பணிகள் எப்போது முடியும் என்பது குறித்த கால வரையறையை என்னால் கூற முடியாது. ஆனால் சட்ட நடைமுறைகள் அனைத்தையும் முடித்து விட்டு, எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் கோவில் பணிகள் தொடங்கப்படும்’ என்று தெரிவித்தார்.
பிரபல கட்டிட கலை நிபுணர் சோம்புரா ராமர் கோவில் கட்டிடத்தை 1989-ம் ஆண்டு வடிவமைத்து இருப்பதாகவும், அந்த வடிவமைப்பின்படி கோவிலை கட்ட வேண்டும் என்றும் அலோக்குமார் கேட்டுக் கொண்டு உள்ளார்.
கோவில் கட்டும் பணி அடுத்த ஆண்டு (2020) ஏப்ரல் மாதம் தொடங்கும் என தகவல் வெளியாகி இருக்கிறது. ராம நவமி தினம் ஏப்ரல் மாதம் கொண்டாடப்படுவதால், அதையொட்டி கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்படும் என தெரிகிறது. தொடர்ந்து 5 ஆண்டுகளில் இந்த பணிகளை முடிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.