”ராஜஸ்தான் மகள்கள் அரசிடம் பாதுகாப்பு கேட்டால், பொய்யான குற்றச்சாட்டுகள் கூற வேண்டாம் என்கின்றனர், மாநில மகள்களின் கண்ணீரை காங்கிரஸ் கட்சியினர் கண்டுகொள்வதில்லை” என பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். ராஜஸ்தான் மாநிலம் பரண் மாவட்டத்தில் உள்ள அண்டா பகுதியில் பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டார். பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: இங்குள்ள மக்களுடன் பா.ஜ., எப்போதுமே சிறப்பான உறவைக் கொண்டுள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிறது. இப்போது, ’வளர்ந்த இந்தியா’ என்ற இலக்கு நம் முன் இருக்கிறது. ராஜஸ்தானை வளர்ந்த மாநிலமாக மாற்றாமல், இந்தியாவின் வளர்ச்சி முழுமையடையாது.
ஊழல், வாரிசு அரசியல், தவறுகளை மறைத்தல் ஆகியவை நாட்டின் மூன்று எதிரிகள். இவை இருக்கும்வரை நாட்டை வளர்ச்சி அடைய செய்வது கடினம். இந்த மூன்று தீமைகளின் அடையாளமாக காங்கிரஸ் இருக்கிறது. காங்கிரஸில் அமைச்சராக இருந்தாலும் சரி, எம்.எல்.ஏ.,வாக இருந்தாலும் சரி அனைவரும் கட்டுப்பாடற்றவர்கள்; அவர்கள் மீது மக்கள் எரிச்சலடைந்துள்ளனர். காங்கிரஸ் ராஜஸ்தானின் பொதுமக்களை கொள்ளையர்கள், கலவரக்காரர்கள் மற்றும் குற்றவாளிகளிடம் ஒப்படைத்துள்ளது. காங்கிரசின் ஆதரவால் சமூக விரோத சக்திகளின் பலம் அதிகரித்துள்ளது. ராஜஸ்தான் மக்களின் தலை துண்டிக்கப்படுகிறது; அதனை கொண்டாடவும் செய்கின்றனர். ராம நவமி, ஹோலி, அனுமன் ஜெயந்தி உயிரிழப்புகள் என பண்டிகைகளுக்கு பெயர் பெற்ற ராஜஸ்தானில் கலவரங்கள் நடக்கின்றன.
சாப்ரா கலவரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் சிவப்பு கம்பளத்தில் நடந்து செல்கிறார். கலவரக்காரர்கள் தவிர, காங்கிரஸ் அமைச்சர்களும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களுடன் தொடர்பில் உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் ராஜஸ்தானில் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இங்கு, முதல்வருக்கு நெருக்கமான அமைச்சர்கள், சட்டசபை வளாகத்தில் நின்று, குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு அளிக்கின்றனர். ராஜஸ்தானின் மகள்கள் அம்மாநில அரசிடம் பாதுகாப்பு கேட்டபோது, பொய்யான குற்றச்சாட்டுகளை கூற வேண்டாம் என்று அம்மாநில அரசு கூறியது. மகள்களின் கண்ணீரைப் பார்க்க காங்கிரஸ் கட்சியினருக்கு நேரமில்லை. இவ்வாறு அவர் பேசினார்.