கடந்த வாரம் இந்திய அரசியலில் இரண்டு கோமாளிகளின் கூத்து அரங்கேறியது. ஒருவர் காங்கிரஸ் கட்சியின் அகில பாரத தலைவராக நியமித்துக் கொண்ட ராகுல் காந்தி, மற்றொருவர் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால். வாய்க் கொழுப்பின் காரணமாக பல் வேறு தலைவர்கள் மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளை பொது மேடையில் பேசி, வழக்கை சந்திப்பதால், கோமாளித்தனமான மன்னிப்பு கோரும் படலத்தை துவக்கியுள்ளார் கேஜ்ரிவால். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, வீர சாவர்க்கரின் கருணை மனு சம்பந்தமாக உளறி கொட்டியுள்ளார்.
வழக்கை சந்திக்க பயந்து, ஆங்கிலேய அரசுக்கு கருணை மனு அனுப்பியவர் சாவர்க்கர் என அபாண்டமான குற்றச்சாட்டை வைத்துள்ளார். சாவர்க்கரின் வாழ்க்கை பற்றிய முழுமையான புரிதல் இல்லாததன் காரணமாக இந்த குற்றச்சாட்டை ஒவ்வொரு வருடமும், அவரின் பிறந்த தினத்தன்று விவாதம் செய்வது இடதுசாரிகளின் கொள்கை. சாவர்க்கரின் பெயருக்கு களங்கம் கற்பிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே, இடதுசாரிகள், சந்தடி சாக்கில், ஆங்கிலேயருக்கு வெண்சாமரம் வீசிய சம்பவத்தை மறந்து விட்டு பேசுவார்கள். ‘லெட்டர்ஸ் பிரம் அந்தமான்’ என்ற தலைப்பில் தனது சகோதரர் டாக்டர் நாராயண் சாவர்க்கருக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பை படித்து விட்டு ராகுல் வெளியே பேச வேண்டும்.
வாழ்க்கைக்கான எனது போக்கு என்ற நூலிலும் சாவர்க்கர் சில விஷயங்களை தெரிவித்திருக்கிறார். இரண்டு முறை தண்டிக்கப்பட்டு அந்தமான் சிறைக்கு அனுப்பபட்டார். ‘சில வருடங்கள் சிறையில் இருந்தவர்கள் வெளியில் செல்லவும் வெளியிலேயே தங்கிக் கொள்ளவும் அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால் 11 வருடங்கள் சிறையில் இருந்த எனக்கு ஏன் இந்த ஓரவஞ்சனை, இது முற்றிலும் காட்டுமிராண்டித்தனமானது’ என்று கேள்வி எழுப்பி கடிதம் எழுதினார் சாவர்க்கர். இம் மாதிரியான கடித்ததை எழுதிய சாவர்க்கர் கருணை மனு கொடுக்க காரணம் என்ன என்பதையும் ஆராயாமல் அள்ளித் தெளித்த அவசர கோலமாக பேசுவது அழகல்ல. முதல் உலக யுத்தம் நடைபெற்ற போது, சாவர்க்கர், மாண்டேகு என்பவருக்கு எழுதிய கடிதத்தில், பிரிட்டன், பிரிட்டிஷ் இந்தியாவின் காலனித்துவ சுய நிர்ணயத்தை அமைக்க வேண்டும். அவ்வாறு அமைத்தால், அதன் காரணமாக, இந்திய புரட்சியாளர்கள் தங்களது போர் எதிர்ப்பை நிறுத்தி, யுத்தத்திற்கு ஆதரவாக இருப்பார்கள் என்று குறிப்பிட்டவரை தேச பக்தியில்லாதவராக வர்ணிப்பது, இடதுசாரிகளின் குள்ளநரித்தனம் என்பதை புரிந்து கொள்ளாமல் ராகுல் காந்தி பேசியுள்ளார்.
ராகுல் காந்தியின், அவரது தாயாரின் இந்திய பாசத்தையும் சற்று திரும்பி பார்த்து, சாவர்க்கரைப் பற்றிய விமர்சனத்தை வைத்திருக்க வேண்டும். ஒன்று 1971-ல் கிழக்கு பாகிஸ்தானுக்கு விடுதலை பெற்றுத் தர பாகிஸ்தானுடன் போர் தொடுக்கப்பட்டது. ஒரு நாட்டில் போர் ஏற்பட்டால், விமான ஓட்டிகள் அதாவது பைலட்களுக்கு விடுமுறை கொடுக்கப்பட மாட்டாது என்பது நடைமுறை விதி. இந்த விதிமுறையை மீறி சோனியா காந்தி தனது கணவர் ராஜீவ் காந்தியை கட்டாயமாக விடுப்பு எடுத்து, தனது குழந்தைகளுடன் இத்தாலிக்கு சென்று, போர் நின்ற பின்னர் திரும்பியது ஏன்? இரண்டாவது , 1977-ல் ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தவுடன், இந்திரா காந்தி கைது செய்யப்பட்டார். தானும் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில், தனது குழந்தைகளுடன், இத்தாலி தூதரகத்தில் தஞ்சம் புகுந்தது ஏன்? இதற்கு விளக்கம் கொடுத்து விட்டு ராகுல் காந்தி சாவக்கரை விமர்சனம் செய்யட்டும்.
* * *
அமித்ஷா கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்; அவர் பாஜக தலைவராக இருக்கிறார் என்றார் கேஜ்ரிவால்.
இஷ்ரத் ஜகான் வழக்கில் உயர் நீதி மன்றம் அமித் ஷா மீது குற்றமில்லை என்றும், அது என்கவுன்டர் என்று கூறிய பின்னரும், காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பொய் பிரச்சாரம் செய்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சியில் ஐ.பி.யின் அறிக்கையில் இஷ்ரத் ஜகான் ஒரு லஷ்கர் இ தொய்பாவின் உறுப்பினர் என்றும் தெரிவித்த பின்னர், பயங்கரவாதிகளுக்கு வக்கலாத்து வாங்குவது தான் காங்கிரஸ் கட்சியின் வேலைத்தனம். ஆகவே ராகுல் காந்தி இப்படி கோமாளித் தனமான குற்றச்சாட்டு கூறும் போது, காங்கிரஸ் கட்சியின் அடிவருடிகள் கை தட்டுவார்கள். ஆனால் அரசியல் தெரிந்தவர்கள் நகைப்பார்கள்.
1975 ஜனவரி 2ந் தேதி பிகார் மாநிலம் சமஸ்திப்பூர் ரயில் நிலையத்தில், சமஸ்திபூர் – முஸபராபாத் அகல ரயில் பாதை திறப்பு விழாவிற்கு வருகை தந்த, காங்கிரஸ் கட்சியின் பொருளாளரும், ரயிவே அமைச்சருமான எல்.என். மிஸ்ரா, வெடி குண்டு தாக்குதலில் மரணமடைந்தார். இந்த மரணத்திற்கு யார் காரணம் என்பதை முழுமையான விசாரனையை கூட நடத்த வில்லை. குற்றவாளிகள் காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர்களாக இருக்கலாம் என்ற அனுமானம் தொடர்ந்து இருந்தது. இதுதான் காங்கிரசின் யோக்கியதை.
இந்திரா காந்தியின் இரண்டாவது மகன் சஞ்சாய் காந்தி 1980ல் விமான விபத்தில் காலமானார் என்ற விவகாரமும் காங்கிரஸ் கட்சியை சுற்றி வருகிறதே, அது பற்றிய விவரங்களை ராகுல் காந்தி விளக்கமாக பொது மக்கள் முன்னிலையில் கூறுவாரா? வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் டெல்லி நிருபர் லெவிஸ் சைமன் என்பவர் எழுதிய கட்டுரையில், காங்கிரஸ் கட்சியின் அசைக்க முடியாத தலைவியின் மீது குற்றச்சாட்டு இது: அவரசநிலையின் போது கேரளத்தில் பொறியியல் கல்லூரி மாணவன் ராஜன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திலும் காங்கிரஸ் கட்சியின் கை இருப்பதாக இடதுசாரிகள் வைத்த குற்றச்சாட்டுக்கு பதில் இல்லையே?
அரவிந்த் கேஜரிவால் – ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளில் தானே தேர்வு செய்த பலரை ஊழல் காரணமாகவும், மற்ற குற்றங்கள் காரணமாகவும் அமைச்சர் பதவிலியிருந்து நீக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது. முறையான ஆவணங்கள் இல்லாமல் சகட்டு மேனிக்கு மற்றவர்கள் மீது குற்றச்சாட்டை சுமத்தியதால், பலரும் இவர் மீது அவதூறு வழக்குகள் போட்டதன் விளைவாக, வழக்கை சந்திக்க இயலாத நிலையில், இறுமாப்பாக பேசிய அரவிந்த் கேஜ்ரிவால், ஒவ்வொருவரிடமும் மன்னிப்பு கேட்டு வருகிறார். ‘இந்த வாரம் மன்னிப்பு கேட்பு வாரம்’ என தொலைக்காட்சி விளம்பரம் போல் இருக்கிறது.
இவ்வாறு மன்னிப்பு கேட்க வேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது. பெருந்தொகைகள் கேட்டு இவர்கள் மீது பாயும் வழக்குகள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மான நஷ்டமாக ரூ.10 கோடி கேட்டு தொடுத்த மூன்று வழக்குகள் ஒரு சாம்பிள். நிதின் கட்கரி, பஞ்சாப் அகாலி தளத்தின் தலைவர் பிக்ரம் சிங் மஞ்சிதா, கபில் சிபில் மகன் அமித், நாடாளு ராஜ்ய சபா உறுப்பினர் சுபாஷ் சந்திரா, ரமேஷ் பித்தூரி, அங்கித் பரத்வாஜ் (பா.ஜ.க. வின் இளைஞர் அணியின் தலைவர்) ஷீலா தீட்சித்தின் அரசியல் ஆலோசகர் பவன் கீரா போன்றவர்கள் கேஜரிவால் மீது அவதூறு வழக்குகள் தொடுத்துள்ளார்கள். முப்பது வழக்குகள்! இதில் வேடிக்கை என்னவென்றால், தேர்தலில் தனக்கு டிக்கட் கொடுக்க வில்லை என அவரது கட்சியைச் சார்ந்த சுரேந்தர் குமார் சர்மாவும் வழக்குப் போட்டிருக்கிறார்!
டெல்லி முதல்வர், இனி வாய்சவடால் விடுவதற்கு தயக்கம் காட்டுவார். தி.மு.க. காமராஜரைப் பற்றிய விமர்சனம் ஒன்று உண்டு, அதாவது கொட்டாவி விடும் போது மட்டும் வாய் திறப்பார் என்ற விமர்சனம் தற்போது அர்விந்த கேஜரிவாலுக்கும் பொறுந்தும்.