யுகாதி விழா
‘யுகாதி விழா’ என்பது வருஷப் பிறப்பாகும். நமது தமிழ்நாட்டில் இதனை தெலுங்கு வருஷப் பிறப்பு என்று அழைப்பார்கள். ஒவ்வொரு மொழிக்கென்று தனித்தனியாக வருஷப் பிறப்பு கிடையாது. ஆண்டைக் கணக்கிடும் முறையில் நம் நாட்டில் இரண்டு முறைகள் கடைபிடிக்கப் படுகின்றன. ஒன்று சந்திரனை மையமாக வைத்து கணக்கிடுவது. இதற்கு ‘சாந்த்ரமானம்’ என்று பெயர். இந்த முறையின் துவக்க நாளைத்தான் ‘யுகாதி’ என்றும் ‘வருஷப் பிரதிபதா’ என்றும் அழைக்கிறோம். ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஹிந்தி பேசும் மாநிலங்களில் வருஷப் பிறப்பாக ‘யுகாதி’ பண்டிகையைக் கொண்டாடுகின்றனர்.
தமிழ்நாட்டில் நாம் கொண்டாடும் சித்திரை முதல் தேதியை ‘தமிழ் வருஷப் பிறப்பு‘ என்கிறோம். அது சூரியனை மையமாக வைத்து கணக்கிடுவதாகும். இதற்கு ‘சௌரமானம்’ என்று பெயர். தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளம், பஞ்சாப், ஹிமாசல பிரதேசம், காஷ்மீர், வங்காளம், அஸ்ஸாம், ஒடிஸா, நேபாளத்தில் இந்த நாளையே வருஷப் பிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.
வெற்றித் திருநாள்
‘யுகாதி’ என்று அழைக்கப்படுகின்ற நாளன்றுதான் பிரபு ஸ்ரீ ராமனின் ராஜ்யாபிஷேக விழா கொண்டாடப்பட்டது. விக்கிரமாதித்தன் சகர்களை வென்றான். சாலிவாஹணன் அவர்களை பாரதத்திலிருந்து விரட்டி அடித்தான். இந்த நிகழ்ச்சிகளைக் குறிக்கும் மகிழ்ச்சி விழா இந்நாளில் தான் கொண்டாடப்படுகிறது.
வாழ்க்கையில் எப்போதுமே இனிமையான சம்பவங்கள்தான் நடைபெறும் என்பதில்லை. மாறாக கசப்பான சம்பவங்களும் தோல்விகளும்கூட வாழ்க்கையில் வந்தே தீரும். ஆகவே இனிப்பும் கசப்பும் கலந்ததே வாழ்க்கை என்பதை நமக்கு நினைவுபடுத்துவதற்காக யுகாதி விழா அன்று உணவில் வேப்பம்பூ பச்சடி இடம் பெறுகிறது. புத்தாண்டைப் பற்றி நாம் தெரிந்து கொள்வதற்காக இந்நன்னாளில்தான் பஞ்சாங்கம் படிக்கப்படுகிறது.
ஆர்.எஸ்.எஸ். அஸ்திவாரம்
திருச்சி நகரத்திற்கு உள்ளே நுழையும் போதே ஸ்ரீரங்கம் கோபுரத்தைப் பார்க்க முடியும். அதேபோன்று திருவண்ணாமலை நகருக்குள் நுழையும் போதே அருணாசலேஸ்வரர் கோயில் கோபுரத்தை தரிசிக்க முடியும். இதுபோன்று பிரம்மாண்டமான கோயில் கோபுரங்களைப் பார்க்கும்போது கோபுரத்தின் மேலே உள்ள கலசங்களை நீண்ட தூரத்திற்கு முன்பே பார்க்க முடியும். ஆனால் அந்த பிரம்மாண்டமான கோபுரங்களின் அஸ்திவாரம் யாருடைய கண்ணுக்கும் தெரியப் போவதில்லை.
ஆம்… அதேபோன்றுதான் இன்று நாடு முழுவதும் பிரம்மாண்டமான இயக்கமாகச் செயல்பட்டுவரும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால் அந்த இயக்கத்தை யார் துவக்கினார், ஏன் துவக்கினார் என்று கேட்டால் பலருக்கும் புரியாது. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைத் துவக்கிய டாக்டர் ஹெட்கேவார் அதன் அஸ்திவாரமாக தன்னை அமைத்துக் கொண்டார்.
புத்தாண்டிலே புது அவதாரம்
மூத்த காரியகர்த்தரான ‘அண்ணாஜி’ என்று அனைவ ராலும் அழைக்கப்படும் தட்சிணாமூர்த்தி சென்னை
ஆர்.எஸ்.எஸ். புதிய அலுவலக திறப்பு விழாவில் உரையாற்றுகின்றபோது, “ஆர்.எஸ்.எஸ். அமைப்பானது தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு விழாக்களைக் கொண்டாடு கிறது. அதில் யுகாதி திருநாளும் ஒன்று. ஆர்.எஸ்.எஸ்.ஸின் ஸ்தாபகரான டாக்டர் ஹெட்கேவார் பிறந்தநாளும் இதே நாளில் வருவது மற்றொரு சிறப்பாகும். இயற்கையாகவே யுகாதி நாளில் பிறவி எடுத்து தனது பிறந்த நாளைத் தனியாகக் கொண்டாட வேண்டிய தேவையே இல்லாமல் செய்து விட்டார். ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம்சேவகர்களுக்கு டாக்டரவர்களின் வாழ்க்கைச் சம்பவங்களை நினைவுகூரவும் அதனால் ஊக்கம் பெறவும் இவ்விழா ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது” என்று கூறினார்.
இறைவனால் துவங்கியது ஆர்.எஸ்.எஸ்
திருச்சி திருப்பராய்த்துறையில் ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம் அமைந்துள்ளது. அதனைத் துவக்கிய
வர் அமரர் சித்பவானந்த ஸ்வாமிகள். ஸ்வாமிகள் ஒருமுறை ஆர்.எஸ்.எஸ் முகாமில் கலந்து கொண்டு பேசும்போது, “நீங்கள் ஆர்.எஸ்.எஸ்.ஸைத் துவக்கியது டாக்டர் ஹெட்கேவார் என்கிறீர்கள், இல்லை இது இறைவனால் துவக்கப்பட்டது. இறைவன் தனது கருவியாக டாக்டர் ஹெட்கேவாரை அனுப்பினார்” என்றார்.
தாய்நாட்டின் மீது தீவிர பற்றும் ஹிந்துத்துவத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையும் உள்ள லட்சக்கணக்கான தொண்டர்கள் பணியாற்றிவரும் ஒரே இயக்கம் ஆர்.எஸ்.எஸ்.
ஆர்.எஸ்.எஸ்ஸின் வழிமுறை
ஆர்.எஸ்.எஸ். ஓர் அரசியல் அமைப்பு அல்ல. இது ஒரு கலாச்சார இயக்கம். ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் தினசரி காலையிலோ, மாலையிலோ, இரவிலோ ஏதேனும் ஒரு பொது இடங்களில் ஒரு மணி நேரம் சந்திக்கிறார்கள். இத்தகைய சந்திப்புக்கு ‘ஷாகா’ என்று பெயர். ஷாகாவில் உடலுக்கு வலிமை உண்டாக்கும் உடற்பயிற்சிகளும் விளையாட்டுகளும் நடைபெறுகிறது. அத்துடன் மனதிற்காக கதை, பாடல்கள் மூலம் நல்ல பண்புப்பதிவுகள் அளிக்கப்படுகின்றன. அதனால் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் தீவிர தேசபக்தி உள்ளவர்களாக உருவாகி வருகின்றனர்.
1947, 1962, 1965, 1971 ஆகிய ஆண்டுகளில் நடந்த பாகிஸ்தான், சீனப் படையெடுப்புகளின் போது எல்லைகளில் ராணுவத்திற்கு உதவியாக ஆர்.எஸ்.எஸ் செயல்பட்டது.