யாத்திரைக்கு விதிக்கும் தடையை அண்ணாமலை முறியடிப்பார்: பாஜக மாநில செய்தி தொடர்பாளர் உறுதி

பாஜக யாத்திரைக்கு எத்தனை தடைகள் விதித்தாலும், அதை கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை முறியடிப்பார் என்று கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் ஊழல், குடும்ப ஆட்சிக்கு முடிவுகட்டவும், தமிழகம் என்றும் தேசியத்தின் பக்கம்தான் என்பதை உரக்கச் சொல்லவும் ‘என் மண், என் மக்கள்’ என்ற யாத்திரையை கடந்த ஆண்டு ஜூலை 29-ம் தேதி ராமேசுவரத்தில் தொடங்கினார். தமிழகம் முழுவதும் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இதுவரை 189 சட்டப்பேரவைத் தொகுதிகளில் யாத்திரையை வெற்றிகரமாக முடித்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் அண்ணாமலைக்கு அதிகரித்துவரும் மக்கள் செல்வாக்கு, தமிழகத்தை ஆண்ட, ஆளும் கட்சிகளுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது. அதனால், இந்த யாத்திரைக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்த யாத்திரை பிப்.11-ம் தேதி சென்னைக்கு வருகிறது. அதில் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா பங்கேற்கிறார். ஆனால்,யாத்திரைக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. யாத்திரைக்கு எத்தனை தடைகள் விதித்தாலும் மக்கள் ஆதரவுடன் அதை அண்ணாமலை முறிடியப்பார். இவ்வாறு ஏ.என்.எஸ்.பிரசாத் கூறியுள்ளார்.