மொரீஷியஸ் முன்னாள் கவுரவ துாதரிடம் ரூ.850 கோடி சொத்து ஆவணம் பறிமுதல்

 

சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில், சென்னையைச் சேர்ந்த ஆர்.ஆர்., குழும உரிமையாளர் மற்றும் அவரது தொடர்புடைய எட்டு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், 75 லட்சம் ரூபாய் ரொக்கம்; 850 கோடி ரூபாய்க்கான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை பெசன்ட் நகர் கலாஷேத்ரா காலனியில் வசிப்பவர் ரவி ராமன், 60. இவர், சிங்கப்பூரை தலைமையிடமாக வைத்து, ஆர்.ஆர்., குழுமம் என்ற பெயரில், பல்வேறு நிறுவனங்களை நடத்தி வந்தார். மொரீஷியஸ் கவுரவ துாதராகவும் இருந்துள்ளார்.

சென்னை அம்பத்துாரில், தகவல் தொழில் நுட்ப பூங்காவை மேம்படுத்துவதாக, ரவி ராமன் மற்றும் அவரது மனைவி ஷோபனா ஆகியோர், வெளிநாட்டு நிறுவனத்திடம் இருந்து, 117 கோடி ரூபாய் வாங்கி மோசடி செய்துள்ளனர். இது தொடர்பாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதன் அடிப்படையில், அமலாக்கத்துறை அதிகாரிகளும் தனியாக வழக்குபதிந்து, விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த மோசடி தொடர்பாக, சென்னையில் ரவி ராமன் மற்றும் அவரது கூட்டாளிகள் வீடு, அலுவலகம் உட்பட எட்டு இடங்களில், கடந்த 28ம் தேதி சோதனை நடத்தப்பட்டது. அதில், கணக்கில் வராத 75 லட்சம் ரூபாய் ரொக்கம்; 850 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவர்கள், மேலும் பல நிறுவனங்களிடம் இருந்து முதலீடுகள் பெற்று மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. அதுபற்றி தொடர் விசாரணை நடக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.