மே.வங்கத்தில் வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட பீரங்கி குண்டு வெடித்து இருவர் உயிரிழப்பு

மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி மாவட்டம், கிரந்தி ஒன்றியம் சப்படங்கா என்ற கிராமத்தில் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட பீரங்கி குண்டு ஒன்றை ஒருவர் தனது வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளார். பிறகு பழைய இரும்பு கடையில் விற்பதற்காக அதனை உடைக்க முயன்றுள்ளார். இதில் பீரங்கி குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்ததில் இருவர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

சிக்கிம் மாநிலத்தில் கடந்த 3-ம் தேதி மிக கனமழை காரணமாக தீஸ்தா நதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் ராணுவ முகாம் ஒன்றும் சேதம் அடைந்தது. ராணுவ முகாமில் இருந்த துப்பாக்கிகள், வெடி பொருட்கள் உள்ளிட்ட ராணுவ சாதனங்களுடன் 22 வீரர்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். வீரர்களை தேடும் பணி தொடர்கிறது. இங்கிருந்து அடித்துவரப்பட்ட பீரங்கி குண்டு, மேற்கு வங்க கிராமத்தில் வெடித்துள்ளது. இதையடுத்து ஆற்றில் வெடிபொருட்கள் உள்ளிட்ட ராணுவ சாதனங்கள் அடித்து வரப்பட்டால் அவற்றை கையாள வேண்டாம் என பொது மக்களுக்கு ஜல்பைகுரி மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

வெடிபொருட்கள் ஆபத்து குறித்து சிக்கிம் மாநில அரசும் பொதுமக்களுக்கு இதுபோன்ற எச்சரிக்கையை விடுத்துள்ளது.