‘சென்னையில் முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம், பஞ்சமி நிலம் அல்ல’ என, உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகம், ஆதிதிராவிட சமூகத்தினருக்காக ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலத்தில் அமைந்திருப்பதாக, பா.ஜ., பிரமுகர் சீனிவாசன், தேசிய ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி, முரசொலி நிர்வாகத்துக்கு, 2019 நவம்பர், டிசம்பரில், ஆணையம் ‘நோட்டீஸ்’ அனுப்பியது.
இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், முரசொலி அறக்கட்டளை சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. முரசொலி அலுவலகம் அமைந்துள்ள நிலத்தின் உரிமை குறித்து, தேசிய ஆதிதிராவிட ஆணையம் உத்தரவிட, தடை விதிக்கவும் கோரப்பட்டது. இவ்வழக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன், மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிமன்றம் உத்தரவிட்டபடி, அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரமண்லால் ஆஜராகி, நிலம் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்தார்.
ஜெர்மனி நிறுவனத்திடம் இருந்த நிலம், பார்வதி மாதவன் நாயர் என்பவருக்கு விற்கப்பட்டதாகவும், அவரிடம் இருந்து அஞ்சுகம் பதிப்பகம் வாங்கியதாகவும், முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம், அஞ்சுகம் பதிப்பகத்துக்கு சொந்தமானது எனவும், கூடுதல் அட்வகேட் ஜெனரல் தெரிவித்தார். இந்த நிலம், பஞ்சமி நிலம் அல்ல எனவும் தெரிவித்தார். அறக்கட்டளை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், ”புகார் மீது ஆணையம் விசாரணை நடத்தியது. இதுவரை உத்தரவு பிறப்பிக்காமல், நிலுவையில் வைத்துள்ளது. புகார் அளித்தவர் தரப்பில் எந்த ஆவணமும் தாக்கல் செய்யவில்லை.
”முந்தைய அரசின் தலைமை செயலர் தாக்கல் செய்த விபரங்களை மதிக்கவில்லை. நிலத்தின் உரிமை குறித்து ஆணையம் உத்தரவிட மட்டுமே தடை கோருகிறோம். பா.ஜ., லெட்டர் பேடில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அரசியல் பகையை தீர்த்துக் கொள்ள ஆணையத்தை பயன்படுத்துகின்றனர். மணிப்பூரில் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டனர்… அதற்காக ஆணையம் என்ன செய்தது,” என்றார்.
தேசிய ஆதிதிராவிட ஆணையம் சார்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன் ஆஜராகி, ”அரசியலமைப்பு சட்டப்படி ஏற்படுத்தப்பட்ட அமைப்புக்கு, புகாரை விசாரிக்க அதிகாரம் உள்ளது. ஆணையம் தன் கடமையை செய்ய அனுமதிக்க வேண்டும். குறிப்பிட்ட நிலம், பஞ்சமி நிலமா, இல்லையா என்பதை ஆராய்வதை, சட்டம் தடுக்கவில்லை.
”ஆதிதிராவிட சமூகத்தினரின் உரிமை பாதிக்கப்பட்டதா என்ற முடிவுக்கு வர, ஆவணங்களை வரவழைத்து, பரிசீலனை செய்ய வேண்டும். யூகத்தின் அடிப்படையில் தடை விதிக்க கோர முடியாது. வழக்கு நிலுவையில் இருப்பதால், ஆணையம் உத்தரவு பிறப்பிக்கவில்லை,” என்றார்.
புகார் அளித்த சீனிவாசன் சார்பில், மூத்த வழக்கறிஞர் எஸ்.ரவி ஆஜராகி, ”நிலத்தின் வாடகைதாரராக முரசொலி அறக்கட்டளை இருப்பதால், அஞ்சுகம் பதிப்பகத்திடம் கேளுங்கள் என ஆணையத்திடம் கூறலாம். ஆதிதிராவிடராக இருந்தால் மட்டுமே புகார் அளிக்க முடியும் என்பது சரியல்ல.
”இதே பிரச்னை குறித்து, ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த பெரியசாமி என்பவரும் புகார் அளித்துள்ளார். ஆணையம் கோரினால், ஆவணங்களை தாக்கல் செய்வோம்,” என்றார். வழக்கறிஞர்களின் வாதங்களுக்கு பின், எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்வதாக, மூத்த வழக்கறிஞர் வில்சன் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, இவ்வழக்கின் உத்தரவை தேதி குறிப்பிடாமல், நீதிபதி தள்ளி வைத்தார்.