மும்பை டப்பாவாலாக்களைப் போலவே லண்டனில் ‘டிபன் சர்வீஸ்’ தொடக்கம்: தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா வரவேற்பு

தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா, புதுமைகளை ஊக்குவித்து வருகிறார். சமூக வலைதளத்தில் மிகவும் துடிப்புடன் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது எக்ஸ் தளத்தில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், மும்பை டப்பாவாலாக்களைப் போலவே லண்டனில் டிபன் சர்வீஸ் தொடங்கப்பட்டது குறித்த காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
மும்பையில் வேலைக்கு செல்வோருக்கு டப்பாவாலாக்கள் மதிய உணவு எடுத்துச் சென்று கொடுக்கின்றனர். இதற்காக ஆயிரக்கணக்கான டப்பாவாலாக்கள் வேலை செய்கின்றனர். வீடுகளில் சுடசுட சமைக்கப்பட்ட உணவை பணிபுரியும் இடங்களில் கொண்டு சேர்க்கும் வேலைமை கடந்த 100 ஆண்டுக்கும் மேலாக டப்பாவாலாக்கள் செய்து வருகின்றனர். இதுபோல் லண்டனில் டிபன் சர்வீஸ் தொடங்கப்பட்டுள்ளதை தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா வரவேற்றுள்ளார். லண்டனில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த டிபன் சர்வீஸ் தொடங்கப்பட்டுள்ளது. அதற்காக மும்பை டப்பாவாலாக்களைப் போலவே, இந்தியாவில் பயன்படுத்தும் எவர்சில்வர் டிபன் பாக்ஸ்களில் உணவுகளை கொண்டு செல்கின்றனர்.
லண்டனில் பணிபுரிவோருக்கு ‘டிபன் சர்வீஸ்’ பெயரில் சுடசுட உணவுகளை இரு சக்கர வாகனங்களில் எடுத்துச் சென்று விநியோகம் செய்து வருகின்றனர். அதில் இந்திய உணவு வகைகளான பன்னீர் சப்ஜி, காய்கறிகள், சாதம் போன்றவை அடங்கி உள்ளன.தற்போது சைவ உணவு வகைகள் மட்டுமே விநியோகம் செய்யப்படுகின்றன.
சுவை எப்படி? இந்த வீடியோவை எக்ஸ் தளத்தில்வெளியிட்ட தொழிலதிபர் ஆனந்த்மகேந்திரா வெளியிட்டு, ‘‘பரவாயில்லையா – அல்லது அதிக சுவையா – தலைகீழ் காலனித்துவத்தின் ஆதாரம்’’ என்று கருத்து தெரிவித்துள்ளார். ஆனந்த் மகேந்திராவின் கருத்துக்கு பலர் பதிலும், கேள்வியும் எழுப்பி உள்ளனர். இதுகுறித்து ஒருவர், ‘‘காலனித்துவமா அல்லது வியாபார உத்தியா’’ என்று கேள்வி கேட்டுள்ளார். அதற்கு ஆனந்த் மகேந்திரா, ‘‘இது ஒரு சாதாரணமான பதிவு – சிரியுங்கள் – இன்று ஞாயிற்றுக்கிழமை’’ என்று பதில் அளித்துள்ளார். இது வைரலாகி வருகிறது.