முதல்-மந்திரியாக மீண்டும் பதவி ஏற்றார் மனோகர்லால் கட்டார்

அரியானாவில் கடந்த 21 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 90 இடங்களில் ஆளும் பாஜக 40 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 31 இடங்களில் வென்றது. எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், அங்கு தொங்கு சட்டசபை ஏற்பட்டது. இதனால், சுயேட்சைகள் 7 பேர் ஆதரவுடன் ஆட்சி அமைக்க பாஜக முயற்சித்து வந்த நிலையில், திடீர் திருப்பமாக  துஷ்யந்த் சவுதாலாவின் ஜனநாயக ஜனதா கட்சி திடீரென்று, பாரதீய ஜனதா ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு அளிக்க முன்வந்தது.
அதைத் தொடர்ந்து ரவிசங்கர் பிரசாத், மனோகர்லால் கட்டார், ஜனநாயக ஜனதா கட்சி தலைவர் துஷ்யந்த் சவுதாலா, மாநில பாரதீய ஜனதா கட்சி தலைவர் சுபாஷ் பராலா ஆகியோர் அரியானா கவர்னர் மாளிகைக்கு சென்றனர். அங்கு கவர்னர் சத்யதேவ் நாராயண் ஆர்யாவை சந்தித்தனர். சட்டசபை பாரதீய ஜனதா கட்சி தலைவராக மனோகர் லால் கட்டார் தேர்வு பெற்றிருப்பதை தெரிவித்தனர்.
மேலும், பாரதீய ஜனதா கட்சியின் 40 எம்.எல்.ஏ.க்கள், ஜனநாயக ஜனதா கட்சியின் 10 எம்.எல்.ஏக்கள், சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 7 பேர் என மொத்தம் 57 உறுப்பினர்களின் ஆதரவுடன் புதிய அரசு அமைக்க மனோகர்லால் கட்டாருக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்று கோரினர். ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பட்டியலும் கவர்னரிடம் அளிக்கப்பட்டது.
அப்போது கவர்னர் சத்யதேவ் நாராயண் ஆர்யாவிடம், மனோகர்லால் கட்டார் அரசு அமைப்பதற்கு தனது கட்சியின் ஆதரவு கடிதத்தை ஜனநாயக ஜனதா கட்சி தலைவர் துஷ்யந்த் சவுதாலா அளித்தார்.
இந்த நிலையில் புதிய அரசு அமைப்பதற்கு மனோகர்லால் கட்டாருக்கு கவர்னர் சத்யதேவ் நாராயண் ஆர்யா அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில், அரியானா கவர்னர் மாளிகையில் மனோகர்லால் கட்டார் முதல்-மந்திரியாக பதவி ஏற்றார்.  அவருக்கு கவர்னர் சத்யதேவ் நாராயண் ஆர்யா பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
துஷ்யந்த் சவுதாலா துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். மேலும் சில மந்திரிகளும் பதவி ஏற்றனர்.
 
மனோகர்லால் கட்டார் அரசியல் பயணம்
அரியானாவின் ரோட்டக் மாவட்டத்தில் 5-5-1954 அன்று பிறந்த மனோகர்லால் கட்டார் 1977-ம் ஆண்டில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இணைந்தார்.  3 ஆண்டுளுக்கு பின்னர் முழுநேர ஆர்.எஸ்.எஸ். பரப்புரையாளராக மாறினார். சுமார் 17 ஆண்டுகள் ஆர்.எஸ்.எஸ். பரப்புரையாளராக இருந்த இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. 1994-ம் ஆண்டு பாஜகவில் இணைந்த மனோகர்லால் கட்டார் 2000-ம் ஆண்டில் இருந்து 2014-ம் ஆண்டு வரை அரியானா மாநில பாஜக அமைப்பு செயலாளராக பணியாற்றினார்.
2014-ம் ஆண்டு நடைபெற்ற அரியானா சட்டசபை தேர்தலில் முதல் முறையாக கர்னால் தொகுதியில் போட்டியிட்டு 63 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் மனோகர்லால் கட்டார்  வெற்றி பெற்றார்.
அம்மாநிலத்தில் அமைந்த முதல் பாஜக அரசின் முதல் மந்திரியாக 26-10-2014 அன்று பொறுப்பேற்ற மனோகர்லால் கட்டார்  தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் இன்று அரியானா மாநிலத்தின் முதல்-மந்திரியாக பதவி ஏற்றுள்ளார்.