ஆர்.எஸ்.எஸ் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்காத அமைப்பு. ஸ்வயம்சேவகர்கள் சுதந்திர தினத்தையோ அல்லது குடியரசு தினத்தையோ கொண்டாடுவதில் நாட்டமற்றவர்கள் என்ற பொய்த் தகவலை கோயபல்சின் நிகழ்கால வாரிசுகள் தொடர்ந்து பரப்பி வருகிறார்கள். ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் மீது மீண்டும் மீண்டும் சேற்றை வீசி எறிந்து கொண்டே இருக்கிறார்கள். இத்தகைய விஷம சக்திகள் மெய்யைப் பார்க்க மாட்டோம்; உண்மையை கேட்க மாட்டோம்; சத்தியத்தை பேச மாட்டோம்; என கங்கணம் கட்டிக் கொண்டு இயங்கி வருவதை, அடுத்தடுத்து அடுக்கப்படும் அவதூறுகளிலிருந்தே புரிந்து கொள்ளலாம்.
ஆர்.எஸ்.எஸ் தேசபக்திமிக்க இயக்கம். ஸ்வயம்சேவகர்கள் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். சுதந்திர தினத்தையும், குடியரசு தினத்தையும் வெகு சிறப்பாக கொண்டாடி உள்ளனர்.
டாக்டர் அம்பேத்கர் வகுத்து தந்த அரசியல் சாசனம் 1949ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி ஏற்றுக் கொள்ளப்பட்டது. இது 1950ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி அமலுக்கு வந்தது. இதுதான் முதலாவது குடியரசு தினமாகும். இந்த முதலாவது குடியரசு தினத்தை 2வது ஆர்.எஸ்.எஸ் அகிலபாரத தலைவர் (சர்சங்கசாலக்) குருஜி ஸ்ரீ மாதவ சதாசிவ ராவ் கோல்வால்கர் நாக்பூர்
ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் வெகு சிறப்பாக கொண்டாடினார். இந்த விழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
“நமது தேசபக்தர்கள் உருவாக்கித் தந்த அரசியல் சாசனம் இன்று நடைமுறைக்கு வந்துள்ளது. பிரிட்டிஷாருடன் இருந்து வந்த உறவு முற்றிலுமாக அறுபட்டு விட்டது. இப்போது அசோக சக்கரத்தின் ஆட்சி நடைபெறுகிறது. நமக்கு மேலே எந்த அன்னிய சக்தியும் இல்லை. தார்மீக ரீதியாகவோ அல்லது அரசியல் ரீதியாகவோ பிரிட்டிஷாருக்கு இனிமேல் நாம் கட்டுப்பட்டு நடக்க வேண்டியதில்லை.
இந்த பூமியில் மாவீரர்கள் தோன்றிக் கொண்டே இருந்திருக்கிறார்கள். சத்ரபதி சிவாஜியின் வீரப் போராட்டத்தை நாம் ஒருபோதும் மறக்க முடியாது. லோகமான்ய பாலகங்காதர திலகர் நம்மை வழிநடத்தினார். மகத்தான மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவராக அவர் திகழ்ந்தார். அவரது மறைவு மிகுந்த துன்பத்தையும், துயரத்தையும் அளித்தது. அவரைத் தொடர்ந்து மகாத்மா காந்தி அஹிம்சை வழியில் சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்தார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தார்’’ என தேசியக் கொடியை ஏற்றி வைத்து பேருரையாற்றிய குருஜி இவ்வாறு குறிப்பிட்டார்.
நாடு முழுவதும் உள்ள ஆர்.எஸ்.எஸ் கிளைகள் முதலாவது குடியரசு தினத்தை பொதுமக்களுக்கு பயனளிக்கக்கூடிய வகையில் சிறப்பாக கொண்டாடின. டெல்லியில் காலை வேளையில் மழை பெய்து கொண்டிருந்தது. குளிரும் நிலவியது. அந்த வேளையில் ஆயிரக்கணக்கான ஸ்வயம்
சேவகர்கள் டெல்லி ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் திரண்டு விட்டனர். டெல்லி மாநில ஆர்.எஸ்.எஸ். தலைவர் (பிராந்த சங்கச்சாலக்) லாலா ஹன்ஸ்ராஜ் குப்தா தேசியக் கொடியை ஏற்றினார். கூடியிருந்த அனைவரும் தேசியக் கொடிக்கு வணக்கம் செலுத்தினார்கள். டெல்லி மாநில அமைப்பாளர் (பிராந்த பிரச்சாரக்) வசந்தராவ் ஜி ஓஹே அனைவரையும் வரவேற்றதுடன் உணர்ச்சிகரமான உரையையும் நிகழ்த்தினார். `இந்த குடியரசு தினத்தை நாம் சிறப்பாக கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இந்த உணர்வு தொடர்ந்து நீடிக்க வேண்டும். பாரதத்தை மகோன்னதமான சக்தியாக உயர்ந்
தோங்க வைக்க வேண்டும். இதற்காக நாம் அர்ப்பணிப்புடன் அயராது உழைப்போம்’ என்று அவர் குறிப்பிட்டார். அன்னியத் தளையிலிருந்து பாரதம் அடியோடு விடுபட்டுவிட்டது என்பதை உள்வாங்கிக் கொண்டு சர்வதேச அரங்கில் பாரதத்தின் இறையாண்மை மேலோங்க தொடர்ந்து தொய்வின்றி பாடுபடுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தூரில் முதலாவது குடியரசு தின விழாவை ஸ்வயம்சேவகர்கள் ஏழை, எளிய மக்களுக்கு விருந்து படைத்து வரவேற்கத்தக்க முறையில் கொண்டாடினார்கள். குடியரசு தின விழாவில் பங்கேற்ற ஒவ்வொரு ஸ்வயம்சேவகரும் குறைந்தபட்சம் ஒரு உணவு பொட்டலத்தையாவது கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தனர். இதன்படி, ஸ்வயம்சேவகர்கள் உணவு பொட்டலங்களை கொண்டு வந்தார்கள்.
ஏழை, எளிய மக்களுக்கு இவற்றை மகிழ்ச்சியுடன் வழங்கினார்கள். தேசியக் கொடியை ஏற்றிய பிறகு விருந்து நிகழ்ச்சி வெகுநேர்த்தியாக நடைபெற்றது. வேத மந்திரம் முழங்க அனைவரும் உணவை பகிர்ந்துண்டனர். விருந்தினர்களுக்கு உணவை மட்டுமல்லாமல் தண்ணீரையும் ஸ்வயம்சேவகர்கள் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் 2,000க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்கள் கலந்து கொண்டனர். விழா முடிந்ததும் விருந்து நடைபெற்ற இடத்தை ஸ்வயம்சேவகர்களே தூய்மைப்படுத்தினார்கள். அதுமட்டுமல்லாமல் சுற்றியுள்ள பகுதிகளிலும் தூய்மைப் பணியை மேற்கொண்டார்கள்.
நாடு முழுவதும் ஸ்வயம்சேவகர்கள் முதலாவது குடியரசு தின விழாவை எழுச்சிகரமாக கொண்டாடினார்கள் என்ற போதிலும் எல்லா இடங்களிலும் நடைபெற்ற நிகழ்வுகள், செய்திகள், படங்கள் அரிதிலும் அரிதாகவே வெளியாகின.
1950ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6ம் தேதி வெளியான ஆர்கனைசர் இதழில் நாக்பூர், டெல்லி, இந்தூர் உள்ளிட்ட இடங்களில் ஸ்வயம்சேவகர்கள் முதலாவது குடியரசு தினத்தை சிறப்பாக கொண்டாடியது தொடர்பான செய்திகளும் படங்களும் வெளிவந்துள்ளன. அப்போது வெளியான ஆர்கனைசர் இதழ், தொடர்ந்து பொய்யையே பரப்பி வருபவர்களுக்கு சம்மட்டி அடியாக திகழ்கிறது என்பதை கவனத்தில் கொள்ள தவறக்கூடாது.
குருஜி குறிப்பிட்ட முக்கியமான விஷயம் 75 ஆண்டுகளுக்குப் பிறகும் மிகப்பொருத்தமாக உள்ளது. அரசியல் சாசனத்தைப் பற்றிப் பேசுபவர்கள் உரிமைகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஆனால் குருஜி உரிமைகளை மட்டுமே சுட்டிக்காட்டவில்லை. கடமைகளையும் அழுத்தம் திருத்தமாக சுட்டிக்
காட்டினார். கடமை இல்லாத உரிமையால் தேசம் முன்னேறாது. கடமையுடன் கூடிய உரிமைதான் தேசத்தை உயர்ந்தோங்க வைக்கும் என்பதை இன்றைய தலைமுறையினர் உள்வாங்கிக் கொள்வது அவசியம்.
ஆங்கிலேயர்களின் அடிவருடிகளாக சிலர் இப்போதும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது மனங்களில் இருள் மண்டிக்கிடக்கிறது. வெளிச்சத்தைப் பார்க்க அவர்கள் மறுத்து வருகிறார்கள்.
சுதந்திர தினத்தின் போதும், குடியரசு தினத்தின் போதும் சுருதி பேதமாக செயல்பட்டவர்கள் கம்யூனிஸ்டுகளும், சோசலிஸ்டுகளும் என்பது வரலாற்றுப் பதிவாகும். காலச் சுழற்சியில் கம்யூனிஸ்டுகளுக்கும், சோசலிஸ்டுகளுக்கும் ஆலோசகர்களாக காங்கிரஸ்காரர்கள் மாறி விட்டார்கள். இப்போது இவர்களுக்கிடையே எந்த பேதமும் இருப்பதாக தெரியவில்லை. தேச இசைக்கு எதிராக வசைபாடி, சுருதி பேதம் எழுப்புவதையே இவர்கள் முழுநேர தொழிலாக கொண்டுள்ளார்கள். இத்தகையவர்களை ஓரங்கட்ட வேண்டியது தான் தேசபக்தர்களின் தலையாய கடமை.
கட்டுரையாளர்: ஆய்வாளர்
ஆர்கனைசர் ஆங்கில வார இதழிலிருந்து
தமிழில் : அடவி வணங்கி