கவனியுங்கள். ஒரு இந்தியப் பெண் போன வாரம் கலிபோர்னியாவில் நடந்த உலக பளு தூக்கும் போட்டியில் 22 ஆண்டுகளுக்கு பிறகு பாரதத்திற்கு தங்கப்பதக்கம் கிடைக்கச் செய்ததை பற்றியது அல்ல இந்தக் கட்டுரை.
தங்கப்பதக்கம் வென்ற 23 வயது மணிப்பூர் இளம்பெண் மீராபாய் சானுவுக்கு 2 சகோதரர்கள் 3 சகோதரிகள். சொந்த ஊர் மணிப்பூர் மாநிலத்தில் உள்ளது. சிறுவயதில் பல மணி நேரம் சைக்கிள் ஓட்டி தசைகளை வலிமையாக்கிக் கொண்டார் மீரா. பெரிய குடும்பம், வீட்டில் வறுமை. ஆரம்பத்தில் பளு தூக்குபவராக வேண்டும் என்ற எண்ணம் மீராவுக்கு கிடையாது.
வில்வித்தையை பயிற்சி பெற ஆசைப்பட்டு, சரியான பயிற்சியாளர் கிடைக்கவில்லை. எனவே பளு தூக்குவதற்கு மாறினேன். பழைய சாம்பியன்கள் குஞ்சராணி தேவி போன்றவர்கள் தான் எனக்கு ஊக்கம்” என்கிறார் மீரா. ஆனால் இவருக்கு பளு தூக்குவதில் நல்லதொரு பயிற்சியாளர் (கோச்) கிடைத்தார். பெயர் விஜய். அவரது இலக்கு 2020ல் டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக்ஸ்தான்” என்கிறார் அவர். அங்கேயும் தங்கம் வெல்லலாம் என்பதில் உறுதியாக இருக்கிறார்.
அந்த அளவுக்கு கோச் மனதில் நம்பிக்கை ஏற்படுத்தும் விஷயம் எது? அதுதான் மீராவின் தியாகம். தியாகம் என்றால் சட்டென்று புரியாது. அவர் பயிற்சி செய்த உக்கிரத்தை சற்றே பார்த்தோமானால் புரியும். காலை 5.30 மணிக்கு பளு தூக்கும் பயிற்சிக்குப் போனால் இரவு 7.30க்குத்தான் திரும்புவார். அதன் பிறகு இரவு பள்ளியில் படிப்பார். வகுப்பிலோ தூக்கம் அவரை மயக்கிவிடும். பள்ளி நிர்வாகம் முதலில் இதை ஆட்சேபித்தார்கள். ஆனால் பெற்றோர் அசாதாரணமான விதத்தில் மீராவுக்கு பின்பலமாக இருந்தார்கள்.
மீராவின் அப்பா கீர்த்தி சிங் மெய்தேய் பொதுப்பணித் துறையில் எழுத்தர். தன் சம்பளத்தில் 6 குழந்தைகள் வளர்ந்து ஆளாகணும். இந்த நிலையில் பள்ளிப் படிப்புக்கு பதில் பளு தூக்குவதில் மகள் மீரா அசாத்திய ஆர்வம் காட்டுவதை சராசரி பெற்றோர் போல கண்டிக்காமல் பள்ளி நிர்வாகத்துடன் பேசி மீராவின் வாழ்க்கையில் பளு தூக்குவதை மையமான விஷயமாக்கினார்கள். நல்ல அப்பா அம்மா என்கிறார் மீரா.
இப்போது தங்கம் வாங்கிய குஷியில் பூரித்துப் போயிருக்கும் மீரா, ரியோ ஒலிம்பிக்ஸில் வெறுங்கையோடு நாடு திரும்பியபோது, எப்படிப்பட்ட விரக்தியில் நொந்து போயிருப்பார்! அங்கிருந்து தொடங்கி தன்னைத் தேற்றிக்கொண்டு 14 மணி நேர அன்றாட பயிற்சி செய்தார். வாரக் கணக்கில் வீட்டுக்கே திரும்புவதில்லை. சொந்த சகோதரிக்கு திருமணம் நடந்தபோது கூட மீரா பயிற்சியில்தான் மூழ்கியிருந்தார். மனதில் அப்படி ஒரு வேகம். வெற்றியின் மீது அப்படியொரு மோகம்.
1994, 1995 ஆண்டுகளில் ஆந்திராவின் கர்ணம் மல்லேஸ்வரி இதே போட்டியில் தங்கம் வென்றதை அடுத்து பாரதத்திற்கு அந்தப் பதக்கத்தை இந்த ஆண்டு கொண்டு வந்து சேர்த்திருக்கிறார் மீராபாய் சானு. அதற்கு அவர் செய்த பயிற்சியை விட அவர் செய்த அன்றாட தியாகங்கள் இளைய சமுதாயத்துகு என்றென்றும் ஊக்கம் தரும்.