”திருவொற்றியூர் சூரை மீன்பிடி துறைமுக பணிகள், 95 சதவீதம் முடிவடைந்துள்ள நிலையில், டிசம்பரில் முழு பணிகளும் நிறைவடையும்,” என, மத்திய மீன்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா கூறினார்.
‘சாகர் பரிக்ரமா’ திட்டத்தின் வாயிலாக கடல் வழியே பயணம் செய்து, மத்திய மீன்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, மீனவ கிராமங்களுக்கு பயணம் செய்து, மக்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார். அந்த வரிசையில், 9வது கட்ட கடல் பயணத்தின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக, விழுப்புரம் அனுமந்தை மீனவ கிராமத்தில் நேற்று காலை துவங்கினார்.
அதை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டம் புதுப்பட்டினம், மாமல்லபுரம் மீனவ கிராமங்களில், மீனவர்களின் இருப்பிடங்களுக்கு சென்று, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். இதையடுத்து, நேற்று மாலை சென்னை துறைமுகத்தில், தமிழக அரசு அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடந்தது.
இதன்பின், திருவொற்றியூரில், 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சூரை மீன்பிடி துறைமுக பணிகளை, மத்திய மீன்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா பார்வையிட்டார். அத்துடன், காசிமேடு மீன்பிடித் துறைமுக மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அப்போது, அனைத்து மீனவ சங்கங்களின் தலைவர் நாஞ்சில் ரவி, ‘காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை மீன்வள பூங்காவாக மாற்ற வேண்டும். பாரம்பரிய மீன்பிடி மக்களை, பழங்குடியினர் பட்டியல் பிரிவில் சேர்க்க வேண்டும்’ என்பது உள்ளிட்ட, 17 வகையான கோரிக்கைகளை வலியுறுத்தி மனுவை அளித்தார்.
தொடர்ந்து, மத்திய மீன்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, மீனவ மக்களுக்கு, ‘கிசான் கடன் அட்டை’ வழங்கி கூறியதாவது:திருவொற்றியூர் சூரை மீன்பிடி துறைமுக பணிகள், 95 சதவீதம் நறைவடைந்துள்ளன. டிசம்பரில் முழு பணிகளும் நிறைவடையும். மீனவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதற்காக, சுதந்திரத்திற்கு பின், முதல் முறையாக மீனவர் நலனுக்காக, தனித்துறையை துவங்கியவர் பிரதமர் மோடி தான். விவசாயிகளுக்கு விவசாய கடன் அட்டை வழங்கப்படுவதை போன்று, ஆண்டுக்கு, 7 சதவீத வட்டியில் மீனவ மக்களுக்கு ‘கிசான் கடன் அட்டை’ வழங்கப்பட்டு வருகிறது. உரிய நேரத்தில் கடனை திருப்பி தருவோருக்கு, 3 சதவீத வட்டி திருப்பி அளிக்கப்படுகிறது.
டில்லியில் இருந்து கடன் அட்டை திட்டத்தை செயல்படுத்துவதன் வாயிலாக, தமிழக மீனவர்கள் பயனடைவதை கண்டு உள்ளம் மகிழ்ச்சி அடைகிறது இவ்வாறு அவர் கூறினார். மத்திய மீன்வள மேம்பாட்டு ஆணையத்தின் நிதி, 49 கோடி ரூபாய் மற்றும் ‘சாகர் மாலா’ நிதி 49 கோடி என, மொத்தம் 98 கோடி ரூபாய் மத்திய அரசிடம் இருந்து வந்துள்ளது.அத்துடன், காசிமேடு மீன்பிடி துறைமுக பொறுப்பு கழகம், 29 கோடி வழங்கியது. மொத்தம் 127 கோடி ரூபாய் மதிப்பில், மீன்பிடி துறைமுகத்தில், 25 புது திட்டங்கள், நவம்பர் மாதம் பொதுமக்களிடம் கருத்து கேட்டு சுற்றுச்சூழல் அனுமதி பெற்று துவக்கப்படும்.