மீண்டும் விடுதலைப் புலிகள்: இலங்கையில் சீனர்கள் தீட்டிய சதி திட்டம்

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, கடந்த 21ல் புதுடில்லி வந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அவர், இந்தியா வருவதற்கு முன், தமிழக போலீசார், இந்தியா மற்றும் இலங்கை பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு, ஓர் எச்சரிக்கை தகவல் அனுப்பியுள்ளனர். இது குறித்து, பாதுகாப்பு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த மே 26ல், இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள ஷாங்கிரி-லா என்ற ஐந்து நட்சத்திர ஹோட்டலில், ‘டெலோ’ எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் பொதுச் செயலர் சுரேன் குருசாமி ஆகியோர் தங்கினர். இந்த ஹோட்டலுக்கு வந்த சீன உளவுத் துறை மற்றும் சீன பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைவரும், பயிற்சி தலைவரும், டெலோ பிரதிநிதிகளை சந்தித்தனர்.

அப்போது, பெரிய அளவில் பணப்பரிமாற்றம் நடந்தது. ‘இந்த பணத்தை வைத்து, இலங்கையில் டெலோ இயக்கத்தை மீண்டும் உயிர்ப்பித்து பலப்படுத்த வேண்டும்; ஆயுத போராட்டத்தை மீண்டும் துவங்க வேண்டும். ‘இதற்கு தேவையான ஆயுதங்களை, தமிழகத்தில் இருந்து கடத்தி வர வேண்டும். இதற்காக, இலங்கையின் மடகாளேவைச் சேர்ந்த பாவா மற்றும் சபா குகதாஸ் ஆகியோர் துணையுடன், சீன உளவு அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட சிலர், தமிழகத்திற்குள் ஊடுருவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ என, சீன உளவு அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, தமிழக கடலோர பாதுகாப்பு படை உஷார் படுத்தப்பட்டு உள்ளது. மேலும், இது தொடர்பாக தமிழக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தகவல்கள், இந்தியா மற்றும் இலங்கையின் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பகிரப்பட்டுள்ளன. இரு நாட்டு பாதுகாப்பு துறை அதிகாரிகளும் உஷாராகி உள்ளனர். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்