மியான்மர் விவகாரம்: மணிப்பூரில் பதற்றம்

உள்நாட்டு போரால் காயமடைந்த மியான்மர் இளைஞருக்கு சிகிச்சையளிக்க எதிர்ப்பு தெரிவித்து, மணிப்பூர் மருத்துவமனை முன் ஏராளமான பழங்குடியினர் திரண்ட தால் நேற்று பதற்றம் நிலவியது. நம் அண்டை நாடான மியான்மரில் அந்நாட்டு ராணுவம் மற்றும் அவர்களுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களுக்கு இடையே கடந்த சில நாட்களாக சண்டை நடந்து வருகிறது.

நம் நாட்டின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரை ஒட்டிய எல்லை பகுதிகளில் நடந்து வரும் சண்டையால், மியான்மரைச் சேர்ந்த பலர், நம் நாட்டிற்குள் அகதிகளாக வருவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது. இதற்கிடையே, சண்டையின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் குண்டடிபட்ட மியான்மரின் தனான் கிராமத்தைச் சேர்ந்த கோனதுாம் என்ற இளைஞருக்கு, மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள மருத்துவமனையில் நேற்று சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதை கேள்விப்பட்ட கூகி பழங்குடி இனத்தைச் சேர்ந்த பலர், அந்த இளைஞருக்கு சிகிச்சை அளிக்க எதிர்ப்பு தெரிவித்து மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை தடுத்து நிறுத்தியபோது, இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் மற்றும் அசாம் ரைபிள் படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைத்தனர். இதனால் அங்கு சில மணி நேரம் பதற்றம் ஏற்பட்டது. குண்டு காயத்துடன் சேர்க்கப்பட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அசாம் ரைபிள் பிரிவினர் தெரிவித்தனர்.