தென்னாட்டு போஸ் என்றும், ஒவ்வொரு பாரதியனின் உள்ளத்தையும் கிளர்ந்தெழச் செய்யும் ‘ஜெய்ஹிந்த்’ என்னும் கோஷத்தின் தந்தையாகவும் போற்றப்படுபவர் மாவீரன் செண்பகராமன் பிள்ளை. பாரதத்தை அடிமைப்படுத்திய வெள்ளை ஏகாதிபத்தியத்தை நடுநடுங்க வைத்தவர்களில் செண்பகராமன் முக்கியமானவர். 1914ல் முதல் உலக போர் நடந்த காலத்தில், செப்டம்பர் 24ல் சென்னையில் திடீரென்று மூன்று குண்டுகள் வீசப்பட்டன. சென்னை துறைமுகம், செயிண்ட் ஜார்ஜ் கோட்டை, உயர்நீதிமன்றம் என மூன்று இடங்களில் குண்டுகள் வீசப்பட்டன. இவை கடல் வழியே எம்டன் என்ற ஜெர்மானிய கப்பல் மூலம் வந்தவை. இந்த நீர்மூழ்கிக் கப்பலை இயக்கிய வழிகாட்டி செண்பகராமன்.
குழந்தை பிராயத்திலே செண்பகராமன் நாட்டுப்பற்றுடன் இருந்தார். தனது 15ம் வயதில் ஜெர்மானிய உளவு அதிகாரி சர் வில்லியம் ஸ்ட்ரிக்லாண்ட் துணையுடன் இலங்கை சென்றார். அங்கிருந்து இத்தாலி பயணமானார். இத்தாலி மொழியில் இலக்கியமும், அறிவியலும் கற்றார். பின்னர் ஜெர்மனி சென்றார். பொறியியல் பயின்று முனைவர் பட்டம் பெற்றார். ஜெர்மனியின் அதிபர் கெய்சர் செண்பகராமனின் அறிவுத் திறனால் ஈர்க்கப்பட்டார்.
செண்பகராமன், இந்திய விடுதலையை வலுப்படுத்த இந்திய ஆதரவு சர்வதேச அமைப்பை உருவாக்கி அதன் தலைவரனார். வியன்னாவில் நடந்த ஒரு மாநாட்டில் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸை சந்தித்தார் செண்பகராமன். அப்போதுதான் ‘ஜெய்ஹிந்த்’ என்ற வார்த்தையை நேதாஜியிடம் செண்பகராமன் பயன்படுத்தினார். அந்த வார்த்தை பின்னாளில் பாரதத்தின் தாரக மந்திரமானது.
இதற்கு பிறகு செண்பகராமன் முதல் சுதந்திர அரசை காபூலில் அமைத்தார். ஒருமுறை ஹிட்லர் இந்தியர்கள் சுதந்திரம் பெறுவதற்கு தகுதியானவர்கள் அல்ல என்று இழிவாக பேசினார். இதைக் கேட்டு கொதித்தெழுந்த செண்பகராமன், ஹிட்லரை எதிர்த்து பேசி நமது பாரம்பரிய சிறப்புகளை விளக்கி ஹிட்லரை மன்னிப்பு கேட்க வைத்தார்.
இச்சம்பவம் நாஜிக்களுக்கு கொதிப்பூட்டியது. ஒரு விருந்தில் செண்பகராமனின் உணவில் மெல்ல கொல்லும் விஷத்தை கலந்துவிட்டனர். 26.5.1934ல் தனது மனைவி லட்சுமிபாய் மடியில் அவர் உயிர் பிரிந்தது. சாகும் தருவாயில் தன் மனைவியிடம், தான் இறந்த பிறகும் அவர் மனைவி பாரத சுதந்திர போராட்டத்தில் ஈடுபட வேண்டும். தனது சாம்பலை தான் பிறந்த ஊரில் பாயும் கரமணை ஆற்றில் கரைக்க வேண்டும் என்ற இரு கோரிக்கைகள் வைத்தார்.