மே.வங்க மாநிலத்தில் பிரச்னைக்குரிய சந்தோஷ்காலியில் வரும் 7-ம் தேதி நடைபெறும் பேரணியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ்காலி பகுதியில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் இப்பிரச்னை குறித்து பா.ஜ.,வினர் சந்தோஷ்காலிக்கு செல்ல முயன்றனர். அப்போது போலீசார் தடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஏற்பட்ட மோதலில் பா.ஜ.,வை சேர்ந்த சுகந்தா மஜூம்தார் என்பவருக்கு காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் சந்தோஷ்காலி பகுதியில் பா.ஜ., சார்பில் வரும் மார்ச் மாதம் 7-ம்தேதி பேரணி நடத்தப்பட உள்ளது. இப்பேரணியில் பிரதமர் கலந்து கொள்வார் எனவும் கூறப்படுகிறது. வரும் மார்ச் 8-ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் ஒருநாள் முன்னதாக 7-ம் தேதி சந்தோஷ்காலியில் பிரதமர் பங்கேற்கும் பேரணி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.