மதுரை நாயக்க மன்னருள் விசுவநாத நாயக்கரை அடுத்து முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி நடத்தியவர் மாமன்னர் திருமலை நாயக்கர். இவரது தந்தை முத்துகிருஷ்ணப்ப நாயக்கர் ஆவார். இவர் முத்துகிருஷ்ணப்ப நாயக்கருக்கு கி.பி.1587 பார்த்திவ ஆண்டு தைப்பூச நாளில் மகனாகப் பிறந்தவர். திருமலை நாயக்கர் தமது முப்பத்தொன்பதாம் வயதில் ஆட்சிப் பீடத்தில் ஏறி, எழுபத்தைந்தாம் வயதுவரை அரசாட்சி புரிந்தார்.
திருமலை நாயக்கர் தமது தலைநகரை கி.பி.1634 வரை திருச்சியிலும், அதன் பிறகு மதுரையிலும் கொண்டிருந்தார். திருமலை நாயக்கரின் புகழ்பெற்ற படைத்தலைவர் தளவாய் இராமப்பய்யர் ஆவார்.
திருமலை நாயக்கர் தமது ஆட்சிப் பகுதியை விரிவடையச் செய்ய மைசூர்ப் போர், திருவாங்கூர்போர், சேது நாட்டுப்போர், விசயநகர வேந்தருடன் செய்தபோர், செஞ்சிப்போர், இரண்டாம் மைசூர் முக்கறுப்புப் போர் முதலிய போர்கள் நடத்தி வெற்றிகண்டார்.
முதலில் விஜய நகரப் பேரரசுக்குப் உட்பட்டு அரசு செய்த திருமலை நாயக்கர், பின்னர் மதுரையின் மன்னராக தன்னை அறிவித்துக் கொண்டார். காவல்மிகுந்த கோட்டைகள் பலவற்ைற பல இடங்களில் தோற்றுவித்தார். திருமலை நாயக்கர் மரத்தினடியில் அமர்ந்திருக்கும் காளையின் உருவத்தைத் தமது குலச்சின்னமாகக் கொண்டிருந்தார்.
இது மதுரையிலும், திருப்பரங்குன்றத்திலும் இவர் நட்டுவித்த கோவிற்கொடி மரங்களில் இன்றும் காணப்படுகின்றது. திருமலை நாயக்கர் ஆட்சியில் நடந்த கலைப்பணிகளும், சமயப்பணிகளும் பலவாகும்.
மதுரை மாநகரில் இவர் கட்டிமுடித்த அரண்மனை தென்னகத்தில் கி.பி.17ஆம் நூற்றாண்டு கட்டடக்கலைக்கு உதாரணமாக விளங்குகிறது. மதுரை, அழகர்கோயில், திருப்பரங்குன்றம், திருப்புவனம், ஸ்ரீவில்லிபுத்தூர், மன்னார் கோயில் ஆகிய இடங்களில் கோயில்களில் பலமண்டபங்களை உருவாக்கி, அம்மண்டபங்களில் ஆண்டவனை வழிபட்டு நிற்கும் அடியவனாகத் தனது சிற்பங்களை வடித்துள்ளார்.
திருமலை நாயக்கர் மதுரைக் கோயில் நிர்வாகத்தில் ஒழுங்குமுறையை ஏற்படுத்தி பூஜைகள் சிறப்புடன் நடைபெற வழிவகை செய்தார். இன்று மதுரையில் நடைபெறும் தேரோட்டமும், சித்திரைத் திருவிழாவும் ஒருசேர வியக்கத்தக்க வகையில் துவக்கி வைத்தவர் இவரே.
இவரது ஆட்சியில் பல சாலைகளும், அச்சாலையில் வழிச்செல்வோர் தாகம் தீர்த்து, உணவு உண்டு, தங்கி செல்ல சத்திரங்களை ஏற்படுத்தினார். விவசாயத்திற்கு பயன்படும் வகையில், பல நீர் நிலைகளை ஏற்படுத்தினார்.
குமரகுருபரரின் மீனாட்சிபிள்ளைத் தமிழ் திருமலைநாயக்கரின் அரசவையில் அரங்கேற்றப்பட்டதாகக் கூறுவர். குமரகுருபரரும் மீனாட்சியம்மை குறம் என்ற சிற்றிலக்கியத்தில் இவரைப் புகழ்ந்து பாடியுள்ளார்.
குமரகுருபரர் தவிர பிள்ளைப்பெருமாள் அய்யங்கார், சுப்பிர தீபக்கவிராயர் போன்ற தமிழ்ப் புலவர்கள் திருமலை நாயக்கர் காலத்தில் வாழ்ந்தார்கள். அவர்களுள் வடமொழி புலவர் நீலகண்ட தீட்சிதர் குறிப்பிடத்தக்கவர்.
திருமலை நாயக்கர் சைவ, வைணவ சமயங்களுக்கு ஆதரவு அளித்துள்ளார். நாட்டில் எழுந்த சிக்கல்களுக்கு உடனுக்குடன் தீர்வு கண்டவர். கி.பி.13ம் நூற்றாண்டிற்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சி நடத்திய சிறந்த ஆளுமை படைத்த மன்னர்களில் ஒருவராக திருமலை நாயக்கரைக் கூறலாம்.
இவர் கி.பி.1659ம் ஆண்டு மாசிமாதம் நான்காம் நாள் இவ்வுலக வாழ்வை விட்டு மறைந்தார். மதுரை நாயக்கர் மகால் இன்றும் அவரது பெருமையை பறைசாற்றுகிறது.