மாநிலம் தழுவிய ஜன ரக்ஷா யாத்திரை: அரச பயங்கரவாதத்திற்கு அதிரடியான பதிலடி!

 

லகம் மாறி வருகிறது. மாற்றம் ஒன்றே நிரந்தரம். மாற்றத்தில் சிகரம் தொட்டவர்கள் ஏமாற்றியதால் நிலத்தில் வீசப்பட்டு சரித்திரத்தின்  பக்கங்களில் பிறழ் சாட்சியாக இடம் பெற்றார்கள்.

1900களில் உலகை உலுக்கிய கம்யூனிச காற்று, பல நாடுகளில் அதிர்வலைகளை உண்டாக்கியது உண்மை. தோன்றிய 90 ஆண்டுகளில் அது புறப்பட்ட இடத்திலேயே புதைந்து போனதும் உண்மை.

இந்தியாவில் கேரளாவில் கொஞ்சம் நஞ்சம் ஒட்டிக் கொண்டிருக்கும் கம்யூனிஸ்டுகள், உயிர் போய்க் கொண்டிருக்கும் கடைசி யுத்தத்தில் சித்தாந்த எதிரிகளை தீர்த்துக் கட்டி நீர்த்துப் போய் வருகிறார்கள்.

ஒரு சித்தாந்தம் தோல்வியடையும் போது இறுதி யாத்திரையில் வன்முறை எதிர்பார்க்கப்பட்டது தான். காற்று அடங்கி, மலை உருகி கம்யூனிஸ சித்தாந்தம் வங்கக்கடலில் பெருங்காயமாக கரைந்து வருவதை கேரளத்தில் கண் கூடாக பார்க்க முடிகிறது.

5000 ஆண்டுகளாக, எத்தனையோ ஏற்ற இறக்கங்களைப் பார்த்து பழக்கப்பட்ட ஹிந்துத்துவாவிற்கு கேரளா இன்று மீண்டும் மகுடம் சூட்ட தயாராகி வருகிறது. இந்த வேதியியல் மாற்றத்தில் வெப்பம் வெளியாவது இயற்கை. பழைய பொருள் தனித்தன்மை இழந்து காணாமல் போவதும் இயற்கை.

இந்த உண்மையை ஏற்க மறுக்கும் கம்யூனிஸ்டுகளுக்கு கடவுளின் சொந்த பூமி கேரளா, சரியான பாடம் புகட்டி வருகிறது பாஜகவின் ஜனரக்ஷா (மக்கள் பாதுகாப்பு) யாத்திரையின் வரலாறு காணாத வெற்றி மூலம்.

கட்டுப்பாடும் ஒழுக்கமும் ரிஷி, முனிவர்கள், ஞானிகளும், யோகிகளும்  உருவாக்கிய சித்தாந்தத்தின் மையப்புள்ளியை விட்டு அகலாத ஒரு இயக்கம். இடையில் வந்த தடையை தகர்த்தெறிவதை கேரளம் கண்ணுக்கு முன் இன்று பார்த்துக் கொண்டிருக்கிறது.

கண்ணனூர் ஜில்லா ஜனரக்ஷா யாத்திரை தொடங்கி சில நிமிடங்களில் மழை, அடை மழை! கேரள மழை எப்படி இருக்கும் என பார்த்தவர்களுக்கு புரியும். 5000த்துக்கும் அதிகமான மக்கள் கூட்டம் பவனி. 2000த்துக்கும் மேல் பெண்கள் பலர் கையில் குழந்தைகளுடன்! கொட்டும் மழையில், ஓடாமல் ஒதுங்காமல் பாரத் மாதா கீ ஜெய் கோஷத்துடன் ராஜ கம்பீர மிடுக்குடன் நடைபயணம் செய்தது கண் கொள்ளாக்க்காட்சி!

இது கம்யூனிஸ்டுகள் கிராமம், செகுவாரா சிட்டி. இங்கு வேறு யாரும் நுழையக்கூடாது என்று அறிவிப்புப் பலகையிட்ட பகுதிகள். இதுவரை அங்கு நுழைந்தவர்கள் வெட்டி வீசப்பட்டதுதான் வரலாறு. இதற்குள்ளேயே காவிப்படை கனஜோராய் நடைபயணம் செய்தது, மார்க்சிஸ்டுகள் வயிற்றில் புளியைக் கரைத்தது.

மாநில முதல்வரின் பினராயி கிராமத்துக்குள்ளும் மார்க்சிஸ்டு மாநில செயலாளர் கொடியேரி ஊருக்குள்ளும் காவிப்படையின் நடைபயணம் கம்யூனிஸ்டுகளின் கடைசி பட்டாலியனை அதிரச் செய்தது.

அக்டோபர் 3 அன்று கோழிக்கோட்டில் தலைவர் அமித் ஷா தொடங்கி வைத்த நடைபயணம் தீபாவளிக்கு முதல் நாள் 17ம் தேதி தலைநகரம் திருவனந்தபுரத்தில் அவராலேயே முடித்து வைக்கப்பட இருக்கிறது.

தங்களது ஆதரவையும் பாசத்தையும் காண்பிப்பதற்காக பாரதத்தின் அத்தனை மாநிலங்களிலுமிருந்தும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாநிலத்தினர் கலந்துகொண்டு வருகின்றனர்.

கடந்த 9 அன்று தமிழக பாஜக சார்பில் 500 கார்களில் 2000 பேர் கலந்துகொண்டார்கள். தமிழக கேரள எல்லையான வாளையாரில் இருந்து வாகன ஊர்வலமாக மூண்டூர் சென்று அங்கிருந்து 11 கி.மீ நடைபயணமாக பாலக்காடு வந்தடைந்தார்கள்.

நிகழ்ச்சியின் சிறப்பம்சம், வெகு நேர்த்தியான ஏற்பாடு. மிகச் சிறிய விஷயங்களுக்கும் சிறப்பு கவனம் கொடுக்கப்பட்டது. ஹைலைட்டாக பாஜக இளைஞர் அணியின் சார்பில் மாநிலவாரியாக தினசரி 500லிருந்து 1000 பேர் கலந்துகொண்டு வருகிறார்கள். 6ம் தேதி தமிழக இளைஞர் அணியுடன் நான் போன அன்று பிகார் இளைஞர் அணி தொண்டர்கள் கலந்துகொண்டதை பார்க்க முடிந்தது.

கேரளத்தில் ஹிந்து இயக்கங்கள் காலூன்ற முடியாது, வேரூன்ற முடியாது என்ற அரசியல் தலைவர்கள், பத்திரிகைகளின் பக்கவாத செய்திகளை தோலுரித்துக் காட்டவும் ஹிந்துத்துவாவின் அதிர்வலையை நாடறியச் செய்யவும் ஜனரக்ஷா யாத்திரை தீர்மானிக்கப்பட்டது.

அரசியல் லாபம் கருதி, அடுத்த தேர்தலை மனதில் வைத்து இஸ்லாமிய தீவிரவாதம், லவ் ஜிகாத், மார்க்சீய சிவப்பு வன்முறை படுகொலைகளிலிருந்து கேரள மக்களை பாதுகாக்க என்ற பாஜகவின் கோஷம் கேரள மக்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

ரெட் டெரர் – லவ் ஜிகாத்” ஒழிக்கப்பட வேண்டும் என்ற பாஜகவின் அறைகூவல், மக்கள் மத்தியில் பெற்ற ஆதரவு நடைபயணம் செய்யும்போது கண்கூடாகத் தெரிந்தது.

சாலையின் இருமருங்கிலும் சாரிசாரியாக கட்டுக்கடங்காத மக்கள் வரவேற்பு, ஒரு கிமீக்கு ஒரு இடத்தில் நடைபயணிகளுக்கு குடிநீர், டீ ஏற்பாடு, அந்தந்த பகுதிகளில் கிறிஸ்தவ இளைஞர்கள் ஏராளமாக கட்சியில் சேர்ந்தது, ஒவ்வொரு ஊரிலும் மாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வேறு மத தலைவர்கள் கலந்துகொண்டு வாழ்த்திப் பேசியது என்பன காவியின் எழுச்சிக்கான சாட்சிகள்.

ஏற்பாட்டாளர்களும் எழுச்சி மிகு யாத்திரை என்பதை தங்கள் செயல்பாட்டின் மூலம் நிரூபித்தார்கள்.

உபயோகித்த தண்ணீர் பாக்கெட், டீ கப்புகள் சாலையை குப்பையாக்காமல் உடனடியாக சுத்தப்படுத்த தனிக்குழு பணி புரிந்தது. நடைபயணப் பாதை முழுவதும் அழகான, அளவான கும்மணம் ராஜசேகரன் படம் தாங்கிய கட்-அவுட்கள். மரங்களில் காவி ஒளிரும் ரிப்பன்கள், நடைபயணிகளுக்கு தொப்பி, சாலையெங்கும் காவித் தோரணங்கள், வீதிகளில் தாமரைக் கோலம் என சம்பிரதாய கலாச்சார அலங்காரங்கள் தலைதூக்கி நின்றதை பார்க்க முடிந்தது.

வளமானால் பொறாமை வரும் என்பதை வயிற்றெரிச்சல் காரர்கள் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது.

யாத்திரையின் வெற்றியை பொறுக்க முடியாத காங்கிரஸ் 13ம் தேதி ஹர்த்தால் அறிவித்தது. கேரளத்தில் யார் ஹர்த்தால் அறிவித்தாலும் அது முழு வெற்றிதான். கல்லுக்கு பயந்துகொண்டு அங்கு அப்போது அத்தனை கடைகளும் மூடப்படும். பாஜகவை பயமுறுத்த காங்கிரஸ் முயல்கிறதாம்!

இதில் முழுமுதல் பாதிப்பாளர்களான  கம்யூனிஸ்டுகள் தங்கள் கடைசி முயற்சியையும் செய்யத் தவறவில்லை. அவர்களும்  பல ஊர்களில் எதிர் யாத்திரை நடத்தினார்கள். எர்ணாகுளம் யாத்திரையில் சிவன் பார்வதி வேடமணிந்தவர்கள் முன்னே சென்றவர்கள். என்ன காரணமோ தெரியவில்லை ஆள் பிடிக்க ஆண்டவனை அழைத்தார்கள் போலும்!

துவக்கி வைத்து 11 கிமீ நடந்த அமித் ஷா அடுத்த நாள் அவசரமாக டெல்லி சென்றதால் 15,000 பேருடன் துவங்கிய நடைபயணம் தோல்வி எனவும் அதனால் அமித் ஷா வரவில்லை எனவும் இடதுசாரி மீடியா எழுதியது.

மீடியாவின் பாஜக எதிர்ப்பு நாம் அறிந்ததே! கேரள மீடியா மொத்தமாக நம் எதிர்ப்பாளர் என்பதும் நாம் அறிந்ததே! கேரளாவைத் தாண்டி இந்த யாத்திரை செய்தி வராமல் பார்த்துக் கொண்டார்கள். ஆனால் நாமோ, டெல்லியில் இதே யாத்திரை தினசரி நடத்திக் கொண்டிருக்கிறோம். இதில் ஒருநாள் மீண்டும் அமித் ஷா கலந்துகொண்டார். தமிழ்நாட்டில் 15ம் தேதி கேரள பாஜகவுக்கு ஆதரவான ஒரு ஆர்ப்பாட்டம் சென்னையில் நடக்கிறது.

ஆனால் தினசரி சராசரி 10,000 பேர் 8 முதல் 10 கி.மீ பாதயாத்திரை செல்லும் ஒரு நிகழ்வை தோல்வி என பொய் செய்தி இடும் மீடியாவின் செயல், பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு விடுமாம் என்பதை நினைவுபடுத்துகிறது.

ஜனரக்ஷா யாத்திரை, மறைந்துவிட்ட கம்யூனிஸ சித்தாந்தத்திற்கு காட்டும் கடைசி டாட்டா. சிவப்பு சித்தாந்தத்திற்கும் லவ் ஜிகாத்திற்கும் அடிக்கும் சவப்பெட்டியின் இறுதி ஆணி.

கேரளாவில் ஒட்டிக் கொண்டிருக்கும் கம்யூனிஸ்டுகளின் கடைசி முதல்வர் பினராயி விஜயன், காங்கிரஸ் கடைசியாக ஆண்ட மாநிலம் கேரளம் என கரைந்து கொண்டு மறைந்து கொண்டிருக்கும் கட்சிகளின் அலறல் ஜனரக்ஷா யாத்திரையின் வெற்றி.