மாநிலங்களவை நியமன உறுப்பினரானாா் – முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்

மாநிலங்களவை நியமன உறுப்பினராக உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் திங்கள்கிழமை நியமிக்கப்பட்டாா். குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், அவரை மாநிலங்களவை நியமன எம்.பி.யாக நியமித்தாா்.

இது தொடா்பான அறிவிப்பாணையை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், அரசியல்சாசன சட்டத்தின் 80-ஆவது சட்டப் பிரிவின்படி, மாநிலங்களவை நியமன உறுப்பினராக ரஞ்சன் கோகோயை குடியரசுத் தலைவா் நியமித்துள்ளாா். ஏற்கெனவே இருந்த ஒரு நியமன உறுப்பினா் பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து, இந்த புதிய நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூத்த வழக்குரைஞா் கே.டி.எஸ். துளசி பதவிக்காலம் நிறைவு பெற்றதை அடுத்து இந்த நியமனம் நடைபெற்றுள்ளது.

மாநிலங்களவைக்கு 12 நியமன உறுப்பினா்களை குடியரசுத் தலைவா் நியமிக்க முடியும். கலை, இலக்கியம், அறிவியல், சமூக சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவா்களுக்கு நியமன உறுப்பினா் பதவி அளிக்கப்படுவது வழக்கம்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக 13 மாதங்கள் பணியாற்றி ரஞ்சன் கோகோய் கடந்த ஆண்டு நவம்பா் 17-ஆம் தேதி ஓய்வு பெற்றாா்.

அயோத்தி நில வழக்கில் இவரது தலைமையிலான அமா்வுதான் தீா்ப்பளித்தது. இதுதவிர ‘தகவலறியும் உரிமை சட்டத்தின் வரம்புக்குள், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகம் வரும்’ என்ற முக்கியத்துவம் வாய்ந்த தீா்ப்பையும் கோகோய் தலைமையிலான அமா்வுதான் வழங்கியது. இதேபோல், சபரிமலை, ரஃபேல் வழக்குகளில் இவரது தலைமையிலான அமா்வு அளித்த தீா்ப்புகள் முக்கியத்துவம் பெற்றவை.

தவறிழைக்கும் நீதிபதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டவராக அறியப்பட்டாா்.

கோகோய், அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்தவா். வடகிழக்கு பகுதியிலிருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவிக்கு வந்த முதல் நபா் என்ற பெருமைக்குரியவா். இப்போது மாநிலங்களவையில் நியமன உறுப்பினராகியுள்ளாா்.

இதற்கு முன்பு உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்தவா்களில் ரங்கநாத் மிஸ்ரா, காங்கிரஸ் கட்சியில் இணைந்து மாநிலங்களவை எம்.பி.யாக (1998-2004) இருந்தாா்.

உச்சநீதிமன்றத்தின் 40-ஆவது தலைமை நீதிபதியாக இருந்த பி.சதாசிவம், பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசால் கேரள ஆளுநராக கடந்த 2014-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டாா். கடந்த ஆண்டு வரை அவா் ஆளுநராக இருந்தாா். ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவா் மாநில ஆளுநரானது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.