மழை, வெள்ளத்தால் மாஞ்சோலை பகுதியில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க, வனத்துறை அனுமதி அளிக்க, முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
அவரது அறிக்கை: திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக சாலைகள் சேதமடைந்துள்ளன. மாஞ்சோலை தேயிலை தோட்டங்களிலிருந்து, அம்பாசமுத்திரம், திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று பயிலும் மாணவ – மாணவியர், வர்த்தகர்கள் உள்ளிட்டவர்கள் போக்குவரத்து வசதியின்றி தவித்து கொண்டிருப்பது வேதனைக்குரியது.
போக்குவரத்து நிர்வாகம் மற்றும் பேரூராட்சி நிர்வாகங்கள் சாலைகளை முழு பயன்பாட்டிற்கு கொண்டு வர தயாராக இருக்கின்றனர். ஆனால், வனத்துறை சாலைகளை சீரமைக்க, அனுமதி மறுக்கிறது. எனவே, அம்மாவட்டத்தின் மற்ற பகுதிகளுடனான தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
எனவே, நாளையே அங்கு முதல்வர் செல்வதாக இருந்தால், போர்க்கால அடிப்படையில் ஒரே நாளில் அனுமதி வழங்கப்பட்டு, சாலைகள் சீரமைக்கப்படுமா இல்லையா என்பது தான் நம் கேள்வி. முதல்வர் ஸ்டாலின் அனுமதி அளித்து, சாலைகள் சீரமைக்க, வனத்துறைக்கு உத்தரவிடுவதன் வாயிலாக, அப்பகுதி மக்கள் மீண்டும் தங்களின் இயல்பு வாழ்க்கை பயணத்தை விரைந்து தொடர உதவ வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.