மஹாகவி காளிதாசர்

‘கவி: க்ராந்திதர்ஸீ’ என்று ஒரு கவிஞனுக்கான விளக்கத்தை சம்ஸ்க்ருத இலக்கியங்கள் கூறும். “புரட்சிகரமாகவும் புதுமையாகவும் மாற்றுக் கோணத்திலும் உலகைப் பார்த்து அதற்கு தகுந்த வார்த்தைகளால் அவ்வுலகிற்கு உருவம் கொடுக்கும் சிற்பிகளே கவிஞர்கள்” என்பது இதன் பொருள். ஒரு நாகரீகத்தின் பிரதிநிதியாக இருப்பது அதைச் சார்ந்திருக்கும் மொழிகளே என்பது அறிஞர்களின் கருத்து. அந்த வகையில் நமது பாரதிய கலாசாரத்தின் பிரதிநிதியாக விளங்கக்கூடிய மொழிகளில் முக்கியமானவை தமிழும் சம்ஸ்க்ருதமும்தான். இம்மொழிகளிலும் பல்வேறு நூல்களை பல்வேறு கவிஞர்கள் படைத்திருந்தாலும் தமிழில் கம்பரைப் போலவும் சம்ஸ்க்ருதத்தில் காளிதாசனை போலவும் நிலைத்த புகழ் பெற்றவர்களை பார்ப்பது அரிது.

பாரத பெருமையைப் பற்றி பல்வேறு வெளிநாட்டு அறிஞர்கள் அறிந்து கொண்டது காளிதாசன், கம்பன் முதலிய கவிஞர்கள் எழுதிய நூல்களின் வழியாகத்தான். காளிதாசனது காவியங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. குறிப்பாக சாகுந்தலமும் மேகதூதமும் மேற்கத்திய நாடுகளின் அறிஞர்களிடையேயும் கவிஞர்களிடையேயும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. அதற்குக் காரணம் நமது தொன்மையான பாரத கலாசாரத்தின் பல்வேறு விழுமியங்களை காளிதாசர் தனது நூல்களின் வாயிலாக தெரியப்படுத்தியது தான்.

மஹாகவி காளிதாசரின் நினைவை நாம் ஆஷாட மாதத்தின் முதல் நாளில் கொண்டாடி வருகிறோம். இவ்வருடம் இது இன்று கொண்டாடப்படுகிறது. இந்நாளில் நாமும் அவரது நினைவைப் போற்றும் வகையில் அவரது காவியங்களுள் சிலவற்றை அல்லது சில பகுதிகளையாவது சம்ஸ்க்ருத மூல நூல்களிலிருந்து அறிந்து படிப்போம்.

பேராசிரியர் எஸ். வேணுகோபாலன்