மருந்து சீட்டின்றி மருந்துகள்

மருத்துவரின் மருந்துச் சீட்டு இல்லாமல் 16 வகை மருந்து மாத்திரைகளை மருந்து கடையில் மக்கள் வாங்கும் வகையில் புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளதாக செய்திகள் வெளிடாகியுள்ளது. இதற்கான சட்டவரைவு மசோதாவை மத்திய அரசு வெளியிட இருப்பதாகவும் இதன் காரணமாக பாராசிட்டமால் உள்பட 16 வகை மருந்து மாத்திரைகளை இனி மருந்துக் கடைகளில் வாங்கிக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில், பாரசிட்டமால், டிஸ்இன்பெக்ட் மாத்திரைகள், இருமலுக்கு சாப்பிடும் டெக்ஸ்ட்ரோமெத்தோர்பன் ஹைட்ரோப்ரோமைட் லோஜன்சஸ் மருந்துகள், ஆன்ட்டி பாக்டீரியல், ஆன்ட்டி பங்கல் க்ரீம், நாசல் டீகன்ஜசன்ஸ், அலர்ஜி மருந்துகள் ஆகிய மருந்துகளும் இடம்பெற்றுள்ளன. இவற்றுக்கு மருத்துவரின் பரிந்துரை சீட்டு தேவை இல்லை. ஆனால் இவற்றைத்தவிர மற்ற மருந்துகளை மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்துக்கடைகளில் விற்பனை செய்யக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறையின் சட்ட விதிகளில் மாற்றம் கொண்டு வர மத்திய அமைச்சகம் ஆலோசித்துவந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதேநேரத்தில் இந்த மருந்துகளை வாங்கி 5 நாட்கள் பயன்படுத்திய பிறகும் நோய் குணமடையாமல் இருந்தால் உடனடியாக மருத்துவரை சம்பந்தப்பட்டவர்கள் அணுக வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த மசோதா குறித்து பொதுமக்கள் தங்கள் ஆலோசனைகளை வழங்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.