சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் புன்னைவனநாதர் சன்னதியில் இருந்த லிங்கத்தை மலரால் அர்ச்சிக்கும் மயில் சிலை சிலை மாயமானது. அதற்கு பதிலாக பாம்பை அலகில் வைத்திருக்கும் மயில் சிலை வைக்கப்பட்டிருந்தது. சிலையை மீட்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில், ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் வழக்குத் தொடர்ந்திருந்தார். இவ்வழக்கு விசாரணையில், கோயில் குளத்தில் மயில் சிலை புதைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. அச்சிலையை கண்டறிய குளத்தை தோண்டுவதற்கு பதில் வேறு தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாமா என்பது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்தின் உதவியை அணுகியுள்ளதாக காவல்துறை தெரிவித்தது. இதற்கான உயர் நீதிமன்ற அனுமதியைத் தொடர்ந்து நேற்று மயிலாப்பூர் கோயில் குளத்தில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் ரப்பர் படகு உதவியுடன் கோயில் குளத்தில் மயில் சிலையை தேடும் பணியைத் தொடங்கினர். பிரத்யேக கருவிகளுடன் நீச்சல் வீரர்களும் குளத்தில் மூழ்கி மயில் சிலையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.