சென்ற வார தொடர்ச்சி…
ஆரிய சமாஜ தலைவர் பி.சி. கல்யாணசுந்தரம் ஹிந்து சமுதாயத்திற்கு உள்ளே இருந்தும் வெளியே இருந்தும் ஆபத்துகள் எழுந்துள்ளதை சுட்டிக்காட்டினார். ஒருபுறம் ஹிந்து சமுதாயத்தையே சார்ந்த சில நாத்திகவாதிகள் நமது தர்ம நூல்களை எரிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். மறுபுறம் பிற மதத்தினர் மதமாற்றம் மூலமாக நமது சமயத்தை அழித்து வருகின்றனர். ஹிந்து சமுதாயத்தில் ஒரு புனரெழுச்சி ஏற்பட்டாலன்றி இந்தப் பிரச்சினைகளை நம்மால் தீர்க்க முடியாது என்றார் அவர்.
வடலூர் ஊரான் அடிகளார் பேசுகையில், இன்று அரசாங்கம் ஏற்படுத்தியுள்ள ஜாதி பிரிவினைகள் – முற்பட்டவர்கள், பிற்பட்டவர்கள், மிகவும் பிற்பட்டவர்கள், பட்டியல் ஜாதியினர் மற்றும் மலை ஜாதியினர்- இதற்கு முன் இருந்த ஜாதி பிரிவினைகளை காட்டிலும் மிக மோசமானது என்றார். இந்த புதிய ஜாதி பிரிவினைகள் காரணமாக பழைய ஜாதி பிரிவினைகளையெல்லாம் மறந்து ஒன்றுபட்டிருந்த சமுதாயத்தினரிடையே மீண்டும் பிளவும், மனக்கசப்பும் தோன்றியுள்ளது என்று அவர் கூறினார். ஹிந்து சமய தலைவர்கள் சாதாரண மக்களிடம் நெருங்கி தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியத்தையும் அவர் வற்புறுத்தினார்.
ஹரிஜன சேவா சங்கத்தின் தலைவரும் காலம் சென்ற ஏ. வைத்தியநாத ஐயரின் அவர்களின் குமாரருமான வி.சங்கரன் ஹிந்து சமயத்திலுள்ள மற்ற பிரிவினருக்கு சமமான மதிப்பும் மரியாதையும் தங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதுதான் ஹரிஜனங்களின் கோரிக்கை என்பதை அனைத்து ஹிந்துக்களும் உணர வேண்டும் என்றார். ஹிந்து சமய தலைவர்கள் கிராமப்புறங்களுக்கு சென்று தீண்டாமை போன்ற தீய நோய்களை அகற்ற முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் மகாநாட்டிற்கு முன் எட்டு நாட்கள் நடைபெற்ற பாதயாத்திரையில் கலந்து கொண்ட உசிலம்பட்டி முன்னாள் எம்.எல்.ஏ முத்து பேசுகையில் இன்று நடைபெறுகின்ற மதமாற்றங்களுக்கு அடிப்படையான காரணம் என்னவென்பதை ஹிந்துக்கள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும் என்றார். தனது சமூகத்தைச் சார்ந்த மக்கள் பொது கிணறுகளில் இருந்து குடிநீர் எடுப்பதைத் தடுப்பது, செருப்பு அணிந்து கொண்டு செல்வது எதிர்ப்பது, முதிர்ந்த ஹரிஜனங்களை ஜாதி ஹிந்துக்களின் சிறுவர்கள் கூட கேவலமாக அழைப்பது போன்ற கொடுமைகளை இன்னும் எவ்வளவு காலம் தாழ்த்தப்பட்டவர்கள் பொறுத்துக் கொண்டு இருப்பார்கள் என்ற கேள்விக்கு நாம் விடை அளித்துதான் ஆக வேண்டும் என்றும் இந்த இழி நிலையை நாம் கண்டிப்பாக போக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
ஹிந்து அறநிலைய பாதுகாப்பு விழா இலாக்கா கமிஷனர் யூ. சுப்பிரமண்யம் பேசுகையில் ஹிந்து சமய தலைவர்கள் கிராமங்களுக்கு சென்று பாமர மக்களிடையே ஹிந்து தர்மத்தின் அடிப்படை கருத்துக்களை பரப்ப வேண்டியதன் அவசியத்தை உணர்த்தினார். கலப்பு திருமணங்கள் மூலமாக ஜாதி பிரிவினைகளை போக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
மலேசியாவை சார்ந்த ராமதாஸ சுவாமிகள் பேசுகையில் ஹிந்து மக்களிடையேயிருந்து ஹரிஜினங்கள் மற்றும் ஜாதி ஹிந்துக்கள் என்கின்ற இந்த பிரிவினையை அறவே ஒழிக்க வேண்டும் என்றார். ஜாதி ஹிந்துக்கள் பலாதத்காரத்தினாலோ மற்ற காரணங்களுக்காகவோ மதமாறிய காலத்தில் கூட ஹரிஜனங்கள் ஹிந்து மதத்தில் உறுதியாக இருந்துள்ளதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
1934-ல் ஏறக்குறைய நான்கு லட்சம் ஹரிஜனங்களில் கீழக்கரையைச் சார்ந்த முஸ்லிம்கள் மதமாற்ற முயற்சித்த காலத்தில் ராமநாதபுரம் ராஜா மற்றும் ராமஸ்வாமி அய்யங்கார் போன்றவர்கள் விடுத்த வேண்டுகோளுக்கிணங் ஹரிஜனங்கள் மத மாறாமல் இருந்தனர் என்றும், ஆனால் அன்று அவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை இன்று வரை நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர் கூறினார். இந்த ஒட்டு மொத்த மதமாற்றங்களுக்கு நீங்கள் ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று விரும்பினால் ஹரிஜனங்களை அந்நியர்கள் போல் நடத்துவதை உடனடியாக நிறுத்தி அவர்களுக்கு சம அந்தஸ்து வழங்க வேண்டும் என்றார். தாங்கள் எந்த காரணத்தை கொண்டும் மதம் மாறமாட்டோம் என்றும் ஹிந்து சமுதாயத்திலிருந்து கொண்டே மத உரிமைகளுக்காக போராடுவோம் என்றும் அவர் அறிவித்த பொழுது கூட்டத்தில் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
கன்னியாகுமரி விவேகானந்தர் கேந்திரத்தை சார்ந்த ரா.பா.வே.சு.மணியம் பேசுகையில், திராவிடக் கழகத்தினர் ஹிந்து சமுதாயத்தினரிடையே பிளவுகளை வளர்க்க செய்து வரும் முயற்சிகளை கண்டித்தார். இஸ்லாம் வளர்ந்தால் நாஸ்திகர்களுக்கு கூட இந்த நாட்டில் இடமிலாது போகும் என்றார். மக்களுடைய வாக்குகளை ஒட்டு மொத்தமாக பெறுவதற்குதான் இன்று அரசியல்வாதிகள் ஜாதிப் பிரிவினைகளை வளர்த்து வருகின்றனர் என்றார் அவர்.
மகாநாட்டில் காலை நிகழ்ச்சிகளின் பொழுது ஐந்து கிறிஸ்தவர்கள் தாய் மதம் திரும்பினர். அவர்களுக்கு ஆசி வழங்கி பேசிய மதுரை ஆதினம் நாட்டிற்கும், சமுதாயத்திற்கும் ஆபத்து ஏற்படுகின்ற காலத்தில் சமய தலைவர்கள் கைகட்டி இருக்க மாட்டார்கள் என்று எச்சரித்தார்.
பிற்பகல் நிகழ்ச்சிகள்
ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தைச் சார்ந்த சுவாமி ஆத்மானந்தா அவர்கள் பேசுகையில் நாம் அனைவரும் ஹிந்துக்கள் என்கிற கருத்தை வளர்த்தோமானால் சமுதாயத்தில் ஒற்றுமை ஏற்படும் என்று கூறினார். ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸசர் தனது உபநயனத்தின் பொழுது வேலைக்கார மாதுவிடமிருந்து பிச்சை பெற்றதையும் தனது தலை முடியால் ஹரிஜன சேரியிலுள்ள கழிவிடங்களை சுத்தம் செய்ததையும் சுட்டிக்காட்டி ஏழை எளிய மக்களிடையே அவர் இறைவனை கண்ட உண்மையை நினைவுறுத்தினார்.
ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் போன்ற இயக்கங்கள் தன்னலம் பேணாது தியாகத் தொண்டளிக்கும் வீரமும் கட்டுப்பாடும் மிகுந்த இளைஞர்களை உருவாக்கி வரும் பணியை சிறந்ததொரு வழியாக அவர் போற்றினார்.
ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தின் மாநில தலைவர் வீ.ரங்கசாமி தேவர் பேசுகையில் இன்று நடைபெறும் மதமாற்றங்கள் சமயம் அல்லது வழிபாட்டு முறைகள் சம்பந்தப்பட்டதல்ல என்றும் அவை நமது தேசீயத்தின் ஆணி வேரையே வெட்டி எறிவதற்கான முயற்சி ஆகும் என்றும் கூறினார். மதமாற்றம் செய்யப்பட்டவர்கள் பாரதத்தில் இஸ்லாமிய குடியரசு ஏற்படுத்த வேண்டும் என்று பேசியுள்ளது பற்றி குறிப்பிட்டு இங்குள்ள ஒவ்வொரு முஸ்லிமும் தன்னுடைய இதயத்தில் பாகிஸ்தானை வைத்துதான் வழிபடுகிறான் என்று அவர் கூறினார். நமது தாய் நாட்டிடமும் நமது தர்மத்திடமுள்ள பக்தியை அழிப்பதுதான் முஸ்லிம்களின் முயற்சி என்றார் அவர்.
முன்னாள் நீதிபதி கிருஷ்ணசாமி ரெட்டியார் பேசுகையில் ஹிந்து தர்மத்தினுடைய பரந்த மனப்பான்மையை எடுத்துக்கூறி இதனுடைய அடிப்படையான வேதாந்த கருத்துக்களை அனைத்து சமயத்தவர்களும் ஏற்றுக் கொண்டுள்ளதை சுட்டிக்காட்டினார். இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் இன்று செய்கின்ற மதமாற்றம் தங்களுடைய எண்ணிக்கையை வளர்த்துக் கொள்வதற்குதான் என்றார் அவர். ஹிந்து மக்களுக்கு அவர் விடுத்த அறை கூவலில் ஜாதி பிரிவினை ஹிந்து மதத்திற்கு ஒரு களங்குமாகும் என்றார். ராமானுஜர் போன்ற மகான்கள் தாழ்த்தப்பட்டவர்களையும் அரவணைத்துக் கொண்டு அவர்களுக்கும் சம அந்தஸ்து அளித்து வழிகாட்டியுள்ளதை அவர் நினைவூட்டினார்.
விஸ்வ ஹிந்து பரிஷத்தைச் சார்ந்த கே.வைத்தியலிங்கம் பேசுகையில் கடந்த 2000 ஆண்டு காலமாக தங்களது சமுதாயத்தைச் சார்ந்த ஒரு பிரிவினரை தாழ்த்தப்பட்டவர்கள், தீண்டப்படாதவர்கள் என்று ஒதுக்கி வைத்துள்ளவர்கள் தான் உண்மையிலேயே ஹிந்து மதத்திற்கு புறம்பாக நடந்து கொண்டுள்ளவர்கள் என்றும் ஆகையினால் அவர்கள் தான் ஹிந்துக்கள் அல்லாதவர் என்றும் தீண்டப்படாதவர்கள் என்றும் கூறினார். ஹிந்து தர்மம் நமது சமயம் ஸ்ரீ ராமானுஜர் நம்மை திருக்குலத்தார் என்று அழைத்தார். மதம் மாறுவது நமது பிரச்சினைக்கு பரிகாரமாகாது. உணர்ச்சிவசப்பட்டு நாம் நமது தாய் நாட்டிற்கும் தர்மத்திற்கும் தீங்கு இழைக்க கூடாது’’ என்று அவர் உணர்ச்சி மிகுந்த குரலில் வேண்டுகோள் விடுத்தார்.
− ஆகஸ்டு 7, 1981
விஜயபாரதம் வார இதழிலிருந்து
– தொடரும்.