சர்ச்சைக்குரிய கிறிஸ்தவ தீர்க்கதரிசி பஜிந்தர் சிங்கின் பழங்குடியின மதமாற்ற நடவடிக்கைகளுக்கு உதவியதற்காக ஒடிசா மாநிலம் பலங்கிரி பகுதி துணை ஆட்சியர் லம்போதர் தருவா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹிந்து அமைப்புகள், கலிங்கா உரிமைகள் மன்றம் ஆகியவை பழங்குடியினருக்கான தேசிய ஆணையத்திடம் (என்.சி.எஸ்.டி) புகார் அளித்துள்ளன. முன்னதாக இது குறித்து ஒடிசா அரசிடம் பலமுறை புகார் அளித்தும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஒடிசாவில் மதமாற்ற சட்டம் அமலில் உள்ளபோதும், பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் சர்ச்சைக்குரிய கிறிஸ்தவ பஞ்சாபி போதகரின் சட்டவிரோத மதமாற்ற நிகழ்வை ரத்து செய்யுமாறு அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டது. எனினும் ஒடிசா அரசு தொடர்ந்து சிறுபான்மையின திருப்திப்படுத்தும் கொள்கைகளை கடைபிடித்து சட்டவிரோத மதமாற்றத்தை ஊக்குவிக்கிறது என கலிங்கா உரிமைகள் மன்றம் அதிருப்தியை வெளிப்படுத்தியது. மேலும், பஜிந்தர் சிங் மீது, கொலைமுயற்சி, ஏமாற்றுதல், கற்பழிப்பு உள்ளிட்ட பல்வேறு புகார்கள் உள்ளன, பலமுறை அவர் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.