போலி இந்திய பாஸ்போர்ட் மூலம் தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியாக சென்று சென்னை திரும்பிய வங்கதேசத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இங்கிருந்து போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடுகளுக்கு தப்புவதாகவும், வெளிநாடுகளில் இருந்து சிலர் திரும்புவதாகவும் சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சீட்டு, கந்துவட்டி மற்றும் போலிபாஸ்போர்ட் புலனாய்வுப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பிரிவு உதவி ஆய்வாளர் கீர்த்தனா தலைமையிலான போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதன்படி, போலி பாஸ்போர்ட் விவகாரம் தொடர்பாக வங்கதேசத்தைச் சேர்ந்த தமீம் உசேன் (34), அதே நாட்டைச் சேர்ந்த சுமோன் சந்திர சர்மான் (28), சுப்ரத் சந்திர கர்மாகர் (38) ஆகிய 3 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “கைது செய்யப்பட்ட தமீம் உசேன் 2016-ம்ஆண்டு வங்கதேசத்திலிருந்து சட்ட விரோதமாக மேற்கு வங்கம் வந்தார். பின்னர், போலியான பெயரில் ஆதார் கார்டு பெற்று அதன் அடிப்படையில் இந்திய பாஸ்போர்ட் பெற்றுள்ளார். பின்னர், 2018-ல் இந்திய குடியுரிமை பெற்றவர் போல் குவைத் சென்று 6 ஆண்டுகளாக துப்புரவுப் பணியாளராக அங்கு பணியாற்றி இந்தியா திரும்பினார். பின்னர் மீண்டும் குவைத் செல்ல முயன்றபோது பிடிபட்டுள்ளார்.
இதேபோல் சுமோன் சந்திர சர்மானும் வங்கதேசத்திலிருந்து 2016-ல் சட்ட விரோதமாக மேற்கு வங்கத்துக்குள் நுழைந்து, போலி ஆவணங்கள் மூலம் இந்திய பாஸ்போர்ட் பெற்று தாய்லாந்து சென்றார்.
அங்கிருந்து சென்னை திரும்பியபோது கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொருவரான சுப்ரத் சந்திர கர்மாவும் சட்ட விரோதமாக மேற்கு வங்கத்துக்குள் நுழைந்து காய்கறிவியாபாரம் செய்து வந்துள்ளார். பின்னர்,போலி ஆவணம் மூலம் இந்திய பாஸ்போர்ட்பெற்று தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியாக சென்று இந்தியா திரும்பியபோது கைது செய்யப்பட்டுள்ளார்” என்றனர்.