உக்ரைனில் நடைபெறும் போரின் ஈர்ப்பு மையம் தற்போது அந்நாட்டின் டான்பாஸ் பகுதி மற்றும் கிழக்கு உக்ரைனின் மற்ற பகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றம், உக்ரைன் தலைநகரான கீவ்வை ரஷ்யா தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரும் முயற்சியின் தோல்வியாக பார்க்கப்படுகிறது.
இதற்கு காரணமாக, உக்ரைன் குறித்த துல்லியமான உளவுத்துறை தகவல்கள் ரஷ்யாவிடம் இல்லை. உக்ரைன் துருப்புகளின் எதிர்ப்பைக் குறைத்து மதிப்பிட்டது போன்றவை கூறப்படுகிறது. இதனால் ரஷ்யா எதிர்பார்த்ததை விட அதிக உயிரிழப்புகளையும் பொருள் இழப்புகளையும் சந்தித்தது. சரியோ தவறோ, இப்போது ரஷ்யா அதன் தவறுகளை சரி செய்து வெற்றியை பெற்றே தீர வேண்டிய கட்டத்தில் உள்ளது.
இதனால் தனது கவனத்தை உக்ரைனின் கிழக்குப் பகுதிக்கு மாற்றியுள்ள ரஷ்யா, ஜெனரல் அலெக்சாண்டர் டுவோர்னிகோவுக்கு உக்ரைனில் போரை வெல்லும் பொறுப்பை வழங்கியுள்ளது.
அலெக்சாண்டர் டுவோர்னிகோ ரஷ்யாவின் மிகவும் அனுபவம் வாய்ந்த ராணுவ அதிகாரிகளில் ஒருவர். சிரியாவில் ரஷ்ய படைகளை வழிநடத்துவதில் முக்கியத்துவம் பெற்றார். செச்சனியாவில் இரண்டாவது போரிலும் பங்குபெற்றார். அவருக்கு 2016ம் ஆண்டு விளாடிமிர் புதின் இவருக்கு ‘ரஷ்யாவின் ஹீரோ’ என்ற பதக்கம் வழங்கி கௌரவித்தார். 2016 முதல் டுவோர்னிகோ, ரஷ்யாவின் தெற்குப்பகுதியின் ராணுவ தளபதியாக பணியாற்றினார்.
புதிய போர்க்களத் தலைமையை அறிமுகப்படுத்தும் ரஷ்யாவின் இந்த முடிவுக்கு பின்னால் சில முக்கிய காரணங்கள் கூறப்படுகின்றன. மே 9ம் தேதி ஹிட்லரின் நாஜிப்படைகளை வீழ்த்தி இரண்டாம் உலகப்போரில் பெற்ற வெற்றியை ரஷ்யா வருடம் தோறும் பிரம்மாண்டமாக கொண்டாடுகிறது. எனவே, வரும் மே 9ம் தேதிக்கு முன்னதாக, ரஷ்யப் படைகள் வெற்றி பெற்று போரை முடிவுக்குக் கொண்டுவர முயற்சிக்கலாம் அல்லது மரியுபோல் துறைமுக நகரத்தை கைப்பற்றி கிரிமியாவிற்கும் கிழக்கு உக்ரைனுக்கும் இடையே தரைவழிப் பாதையை உருவாக்க ரஷ்யா உத்தேசித்து இருக்கலாம் என உக்ரைன் உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
சமாதானப் பேச்சு வார்த்தைகள் முட்டுச் சந்தில் முடிந்துவிட்டது. இலக்கு நிறைவேறும் வரை போர் தொடரும் என்றும் ரஷ்ய அதிபர் புதின் கூறியுள்ளர். இது, இந்த படையெடுப்பின் ரத்தக்களரியான முக்கிய கட்டத்தில் நாம் நுழைகிறோம் என்பதையே கட்டுகிறது.