போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கின் சென்னை கிடங்கில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது, முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
உணவு பொருட்கள் ஏற்றுமதிஎன்ற பெயரில் இந்தியாவிலிருந்து போதைப் பொருளை கடத்திய விவகாரத்தில் ஏற்கெனவே டெல்லியில் வைத்து தமிழகத்தைச் சேர்ந்த 3 பேரை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், போதைப் பொருள் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது ஜாபர் சாதிக் என்பது தெரியவந்தது. இவர் கடந்த 9-ம் தேதி டெல்லியில் கைது செய்யப்பட்டார்.
அவரை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இதில் தமிழ் சினிமா தயாரிப்பு மற்றும் இந்தி சினிமா தயாரிப்பாளர்கள், முக்கிய அரசியல் தலைவர்களுடன் தொடர்பில் இருந்ததாகவும், அரசியல் கட்சிக்கு பல லட்சம் ரூபாய் நிதி அளித்ததாகவும், போதைப் பொருளுக்கான மூலப் பொருட்களை வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக கடத்தியது தொடர்பாகவும் பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் ஜாபர் சாதிக் மீது அமலாக்கத் துறையும் நிதி மோசடி வழக்கு பதிவு செய்தது. மேலும், போதைப் பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக ஜாபர் சாதிக்கின் சகோதரர்கள் முகமது சலீம், மைதீன் ஆகியோரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர போலீஸார்முடிவு செய்தனர் இதையடுத்து,அவர்கள் தலைமறைவாகினர்.
இருவரும் வெளிநாடு தப்பிச்செல்வதை தடுக்க அவர்களுக்குஎதிராக அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜாபர் சாதிக்கிடம் நடத்தப்பட்டுவரும் விசாரணையில் திருச்சியைச் சேர்ந்த சதா என்கிற சதானந்தம் (50) என்பவர் போதைப் பொருள் கடத்தலில் உதவியதாக கைது செய்யப்பட்டுள்ளார். ஜாபர் சாதிக் சென்னையில் போதைப் பொருள் கடத்துவதற்கு இவர்தான் உறுதுணையாக இருந்தார். சோதனையில் சிக்காமல்இருக்கும் வகையில் போதைப் பொருட்களை உணவு பொருட்களுடன் கலப்படம் செய்வது மற்றும் பேக் செய்வதில் இவர் கைதேர்ந்தவர் என கூறப்படுகிறது.
திருச்சியை சேர்ந்தவராக இருந்தாலும் சென்னையிலேயே முகாமிட்டு இவ்வேலைகளை செய்து வந்ததாகவும், போதைப் பொருள் கடத்துவதற்காக தனியாக கிடங்குஅமைத்திருந்ததாகவும் கூறப்பட்டது. மேலும், சதாவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கடந்த 10 ஆண்டுகளாக ஜாபர் சாதிக்உடன் இணைந்து இவர் பணியாற்றியது தெரியவந்துள்ளது. மேலும், சென்னை பெருங்குடி பகுதியில் உள்ள அன்னை சத்யாநகரில் ஒரு கிடங்கு மற்றும் திருச்சியில் ஒரு கிடங்கு ஆகியவற்றின் வழியாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, சென்னையில் உள்ள கிடங்கில் 5-க்கும் மேற்பட்ட மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அந்தகிடங்கில் இருந்து பல ஆவணங்களையும் அவர்கள் கைப்பற்றியுள்ளனர். மேலும், ஜாபர் சாதிக்கை தமிழகம் அழைத்து வந்து அவரிடம் விசாரணை நடத்தவும் மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இந்த போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது குறித்து விசாரிக்கவும், கிடங்குமூலம் நடந்த கடத்தல் தொடர்பாகவும் அவரை தமிழகம் அழைத்து வந்து விசாரிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதனால், போதைப் பொருள் கடத்தல் விவகாரம் மேலும் சூடுபிடித்துள்ளது. இதற்கிடையே கடந்த 2013-ம்ஆண்டு சுங்க அதிகாரிகளால் சதா கைது செய்யப்பட்டதாகவும், ரூ.25 கோடி மதிப்பிலான போதைப்பொருளை மலேசியாவுக்கு கடத்திய வழக்கில் இவர் சிக்கியதாகவும் கூறப்படுகிறது. இதன் உண்மைதன்மை குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.