விஜயதசமியையொட்டி வெளியான விஜயபாரதம் இதழில் “நன்றி சங்கம்” அட்டைப்
படக் கட்டுரை வெளியானது. ரஜ்ஜு பையா என்று சங்க அன்பர்களால் அன்புடன் அழைக்கப்
பட்ட சங்கத்தின் நான்காவது சர்சங்கசாலக் பேராசிரியர் ராஜேந்திர சிங் (1922–2003) பற்றி அதில் தகவல் விடுபட்டிருந்தது.
– ஆசிரியர்
ஆண்டு 1982 அப்போது சங்கத்தின் அகில பாரத பொதுச்செயலாளர் (சர்கார்யவாஹ்) பொறுப்பில் இருந்த பேராசிரியர் ராஜேந்திர சிங், தமிழக சுற்றுப்பயணம் முடித்து கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தார். கன்னியாகுமரி கடக்கும் போது கன்னியாகுமரி அம்மனை தரிசிக்க விருப்பம் தெரிவித்தார். சங்கப் பணி தவிர வேறு எதிலும் கவனம் செலுத்தாத அவர் இது போல விருப்பம் தெரிவித்தது, உடன் சென்ற மூத்த சங்க பொறுப்பாளர்களுக்கு ஆச்சரியம். கோயிலுக்கு சென்றார். சன்னிதியில் ஒரு நிமிடம் கண்மூடி நின்றார். மறு நிமிடம் கேரளா நோக்கி பயணம் தொடர்ந்தார். வியப்புடன் இருந்த பொறுப்பாளர்களிடம், “இன்று எனக்கு 60 வயது ஆகிறது” என்று காரில் போகும்போது சொன்னார்.
ரஜ்ஜு பையா அலகாபாத் பல்கலைக்கழகத்தில் எம். எஸ்ஸி தேறினார். அப்போது அவருக்கு தேர்வு நடத்தியவர் உலகப் புகழ்பெற்ற இயற்பியல் மேதை சி வி ராமன். ராஜேந்திர சிங் அசாதாரணமான அறிவாற்றல் வாய்ந்த மாணவர் என்று அவர் கண்டறிந்தார். அணுசக்தி இயற்பியலில் உயர்நிலை ஆராய்ச்சி செய்ய அவருக்கு பெலோஷிப் ஏற்பாடு செய்து கொடுத்தார். பல்கலைக்கழக விரிவுரையாளராக பல ஆண்டுகள் பணிபுரிந்த ராஜேந்திர சிங் இயற்பியல் துறை தலைவராக உயர்ந்தார். 1942ல் வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடைபெற்ற போது அதில் பங்கேற்றார். அந்த சூழலில் சங்கத்தின் அறிமுகம் பெற்றார். 1946ல் பல்கலைக் கழகப் பணியை துறந்து முழு நேரமாக சங்கப் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். தன்னுடன் இணைந்து செயல்பட ஒரு நல்ல அணு விஞ்ஞானியை எதிர்பார்த்த சி. வி ராமன், தேசியப் பணியில் அவர் ஈடுபட்டது அறிந்து ஆறுதல் அடைந்தார்.
இந்திரா காந்தி தர்பாரில் 1975–77 நெருக்கடி நிலவர காலத்தில் ரஜ்ஜு பையா தலைமறை
வாக இருந்து சர்வாதிகாரியை எதிர்த்த சத்யா
கிரகத்திற்கு முதுகெலும்பாக பணியாற்றினர். பின்னாளில் வாஜ்பாய் அரசில் மத்திய அமைச்சர் ஆன ஷாநாஸ் ஹுசேன் அப்போது கல்லூரி மாணவர். “மிசா கைதிகளின் குடும்பங்களுக்கு உணவுக்கான பண்டங்களை வழங்க ரஜ்ஜு பையா என்னை சைக்கிள் கேரியரில் அமர்த்தி அலகாபாத் உள்ளிட்ட ஊர்களில் வீடு வீடாக அழைத்துச் சென்றார்” என்று அவர் நினைவுகூர்வார்.
ரஜ்ஜூ பையா வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். எளிமையாக வாழ்ந்தவர். இந்த கட்டுரை
யாளரும் சங்க பிரச்சாரகர் கா.ஸ்ரீனிவாசனும் பிரயாக்ராஜ் நகரில் அவரது பூர்வீக இல்லம் சென்று தங்கினோம். அந்த பெரிய வீட்டை அவர் சங்கத்துக்கு அர்ப்பணித்திருந்தார் என்று கேள்விப்பட்டோம். எப்போது சங்க வேலையாக பிரயாக்ராஜ் வந்தாலும் சரஸ்வதி சிசு மந்திர் தொடக்கப் பள்ளி அறை ஒன்றில்தான் தங்குவார் என்று சொன்னார்கள். ரஜ்ஜு பையாவின் எளிமையை சுவாமி சின்மயானந்தர் மிக சுவாரசியமாக வர்ணிக்கிறார்: “ராமஜென்ம பூமி போராட்டத்தின் போது முலாயம் சிங் அரசு 1989 ல் என்னையும் ரஜ்ஜு பையாவையும் மகந்த் அவைத்யநாத்தையும் கைது செய்து ஜிம் கார்பெட் தேசிய புலிகள் சரணாலயத்தின் விருந்தினர் இல்லத்தில் காவலில் வைத்தது. நாங்கள் சிறப்புக் கைதிகள் என்பதால் அரசு பல உதவியாளர்களை நியமித்திருந்தது. ஆனால் ரஜ்ஜு பையா தன் வேட்டி சட்டையை தானே துவைத்துக் கொள்வார். துணி உலர்ந்ததும் மடித்து தலையணை அடியில் வைத்துக் கொள்வார். அதனால் இஸ்திரி போட வேண்டிய வேலை இருக்காது அல்லவா?”