பேடிஎம் வங்கி மீதான தடை விவகாரம்: நிர்மலா சீதாராமனுடன் பேடிஎம் சிஇஓ சந்திப்பு

விதிமுறைகளை மீறியதாக, பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கிக்கு ரிசர்வ் வங்கி தடைவிதித்துள்ளது. இதன்படி, பிப்ரவரி 29-ம் தேதிக்குப் பிறகு அதன் பேமெண்ட்ஸ் வங்கி சேவையை தொடர முடியாது. இந்நிலையில், தடையை விலக்குவது தொடர்பாக பேடிஎம் தலைமை செயல் அதிகாரி விஜய் சேகர் குப்தா நேற்றுமுன்தினம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார். அப்போது,பேடிஎம் வங்கி மீதான தடை,ரிசர்வ் வங்கியின் கொள்கை சம்பந்தப்பட்டது. இதில் மத்திய அரசு செய்வதற்கு ஒன்றுமில்லை என்று நிர்மலா சீதாராமன் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2016 முதல் அறிமுகமான யுபிஐ பரிவர்த்தனையில் போன் பே, கூகுள் பே, பேடிஎம் ஆகிய 3 நிறுவனங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன. இந்நிலையில், 2017-ம்ஆண்டு ரிசர்வ் வங்கியின் அனுமதியைத் தொடர்ந்து பேடிஎம் நிறுவனம், டெபாசிட், வாலட் சேவையை வழங்க பேமெண்ட்ஸ் வங்கியை தொடங்கியது.
இந்நிலையில் விதிகளை மீறியதாக, பேடிஎம் வங்கி சேவைக்கு ரிசர்வ் வங்கி கடந்த ஜனவரி 31-ம்தேதி தடை அறிவித்தது. பிப்ரவரி 29-க்கு பிறகு டெபாசிட், வாலட், பாஸ்டாக் உள்ளிட்ட சேவைகளை அந்நிறுவனம் வழங்கக் கூடாது என்று உத்தரவிட்டது. இதையடுத்து பேடிஎம் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 40 சதவீதம் வரையில் சரிந்தது.