கர்நாடக மாநிலம் பெங்களூருவில், ராமேஸ்வரம் கபே ஹோட்டலில், மார்ச் 1ல், குண்டு வெடிப்பு நடந்தது. இது தொடர்பாக, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். அவர்கள், மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் பதுங்கி இருந்த, பயங்கரவாதிகள் முஸாவீர் ஹுசைன் ஷாகிப்,30; அப்துல் மதீன் அகமது தாஹா,30 ஆகியோரை கைது செய்தனர். இருவரையும், 10 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர்.
இந்நிலையில், குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கோவையில் இரு இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். பெரிய சுப்பண்ண கவுண்டர் தெருவைச் சேர்ந்த டாக்டர் நஹீம் மற்றும் சாய்பாபா காலனியில் உள்ள நாராயணகுரு சாலையைச் சேர்ந்த டாக்டர் ஜாபர் இக்பால் ஆகியோரின் வீடுகளில் என்.ஐ.ஏ சோதனை நடத்தி வருகின்றனர். குண்டுவெடிப்பு சம்பவத்தில் துப்பு கிடைக்குமா? என என்.ஐ.ஏ., அதிகாரிகள் களத்தில் இறங்கி உள்ளனர்.