ஒடிசாவில் உள்ள உலகப்புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் கோயிலில், சில நாட்களுக்கு முன் மர்ம நபர்கள் சிலர், பிரசாதம் தயாரிக்கும் அடுப்புகளில் 43 அடுப்புகளை உடைத்துச் சென்றனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மற்றொரு விவகாரமாக, ஜெகநாதர் கோவிலின் ரத்ன பண்டார் எனப்படும் பொக்கிஷ அறையின் சாவி பல ஆண்டுகளாக காணப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. 1973க்குப் பிறகு அந்த அறையின் சாவி குறித்து எந்த பதிவேட்டிலும் தகவல்கள் இல்லை.
ஜெகநாதர் கோயிலின் முப்பெரும் தெய்வங்களின் பெரும்பாலான நகைகள் கோயிலின் பழமையான ரத்ன பண்டாரில் இரண்டு அறைகளில்தான் வைக்கப்படுகின்றன. இதற்கு மூன்று திறவுகோல்கள் உள்ளன. அதில் ஒன்று பூரி மன்னன் கஜபதி மகாராஜிடமும், மற்றொன்று கோயில் நிர்வாகத்திடமும் மூன்றாவது திறவுகோல் கருவூலத்தின் பொறுப்பாளராக இருக்கும் கோயில் பூசாரியான ‘பந்தர் மேக்கப்’ என்பவராலும் நிர்வகிக்கப்படுகிறது. இங்குள்ள 3வது உள் அறையின் சாவிகள்தான் தற்போது காணவில்லை. கடந்த 2018ல் அந்த உள்பாதுகாப்பு அறையின் சாவிகள் எங்கும் காணப்படவில்லை என்பது தெரியவந்தது. இந்த விவகாரம் அப்போது கடும் சர்ச்சையை கிளப்பியது. ஆனால், காலப்போக்கில் அடங்கிவிட்டது.
உள்அறை கடைசியாக 1964ல் திறக்கப்பட்டது என்றும் அங்கு 100 கிலோவுக்கும் அதிகமான தங்க நகைகள், வெள்ளி பாத்திரங்கள் உள்ளிட்ட ஏராளமான பொக்கிஷங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. பரம்பரையாக அங்கு பணியாற்றும் சில கோயில் பூஜாரிகளும் பணியாளர்களும் அந்த உள் அறையைத் திறப்பது பேரழிவை ஏற்படுத்தும் என்று நம்புகின்றனர். 1985ல் இந்திய தொல்லியல் துறை, ஜெகநாதர் கோயிலின் உள் அறையை பழுதுபார்க்கும் பணிகளுக்காக அந்த மூன்றாவது அறைக்கதவை திறக்க முயன்றபோது விசித்திரமான சப்தங்கள் கேட்டதால் அந்த முயற்சி கைவிடப்பட்டதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், கடந்த காலங்களில் பல மக்கள் கிளர்ச்சிக் குழுக்கள் ஒடிசா கோயிலை கொள்ளையிட்டுள்ளன, உயர் அதிகாரிகள் கோயில் நிர்வாகத்துடன் கூட்டு சேர்ந்து அந்த நகைகளை எடுத்திருக்கலாம், தற்போது கோயில் சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதால் அதனை முழுமையாக சரிசெய்ய அந்த அறை திறக்கப்பட்டு மராமத்து செய்ய வேண்டியது அவசியம் என பொதுமக்கள் பலர் பலவிதமான கருத்துக்காளை தெரிவித்து வருகின்றனர். தற்போது அங்குள்ள பொருட்களை எடுப்பதற்கோ அல்லது தணிக்கை நடத்துவதற்கோ அரசிடம் எந்த திட்டமும் இல்லை என ஒடிசா அரசு தெரிவித்துள்ளது.