பூரண தேச வளர்ச்சியே தாரகம்!

நமது நாட்டுக்கு அடிப்படையாக விளங்கி வருவது விவசாயத் துறை. கடந்த பல வருடங்களாகவே விவசாயத் துறை பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகிறது. எனவே விவசாயம், கிராமங்களின் முன்னேற்றத்துக்கு நிதிநிலை அறிக்கையில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.  விவசாயிகளுக்கான கடன் தொகை முன்னெப்போதும் இல்லாத வகையில்  பத்து லட்சம் கோடி ரூபாய்க்கு உயர்த்தப்பட்டுள்ளது. விவசாயத்துக்குள்ள முக்கிய பிரச்சினை நீர் மேலாண்மை இல்லாத தன்மை. எனவே அதிக அளவில் தடுப்பணைகள் கட்டுவதற்கான திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. நமது பொருளாதாரத்துக்கு அதிக அளவில் பங்களிப்பது சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள்.  அவை சாதாரண மக்களால் ஆரம்பிக்கப்பட்டு, அவர்களின் உழைப்பு, அர்ப்பணிப்பின் மூலம் நாட்டின் தொழில் வளர்ச்சியில் பெரும் பங்காற்றி வருகின்றன. மேலும் நமது தேசத்திலுள்ள மொத்த வேலைவாய்ப்பில் அவை தான் 92 விழுக்காட்டுக்கு மேல் கொடுக்கின்றன. ஆனால் அவற்றின் வளர்ச்சிக்கு வெவ்வேறு வகையான சிரமங்கள் இருந்து வருகின்றன.  போதிய நிதி வசதிகள் இல்லை. அதற்காகத்தான் மத்திய அரசு 2015ம் வருடம் ‘முத்ரா’ வங்கியை அறிமுகப்படுத்தியது.  இந்த நிதி நிலை அறிக்கை  ஐம்பது கோடி ரூபாய் வரை வருமானம் உள்ள நிறுவனங்கள்  செலுத்த வேண்டிய வரி விகிதத்தை 30 விழுக்காட்டிலிருந்து, 25 விழுக்காடாகக் குறைத்திருக்கிறது. அதன் மூலம் அவற்றின் வளர்ச்சி அதிகரித்து வேலை வாய்ப்புகள் பெருகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனிநபர் வரி விகிதத்தைப் பொறுத்த வரையில் 2,50,000 ரூபாய் முதல் 5,00,000 ரூபாய் வரை வருமானம் பெறுபவர்கள் இதுவரை 10 விழுக்காடு வரி செலுத்தி வந்தனர். இப்போது அவர்களுக்கான வரி 5 விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் சாதாரண மக்களுக்கான வரிச் செலவு குறைக்கப்பட்டுள்ளது. மேலும் ரூபாய் ஐம்பது லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு சுமார் 1,25,000 ரூபாய் அளவு பலன் கொடுக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் ஐம்பது லட்ச ரூபாய்  முதல் ஒரு கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு 10 விழுக்காடு சர்சார்ஜ் வரி போடப்பட்டுள்ளது. ரூபாய் ஒரு கோடிக்கு மேல் வருமானம் பெறுபவர்களுக்கு 15 விழுக்காடு சர்சார்ஜ். இதன் மூலம் வருமானம் குறைவாக உள்ளவர்களுக்கு சலுகைகள் அளிக்கப்பட்டும், அதிகமாக உள்ளவர்களுக்கு  அதிக வரி போடப்பட்டும் உள்ளது.

அதேபோல் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்ந்து வரும் ஏழைப் பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்புக் கொடுக்கும் திட்டம் தொடர்ந்து சிறப்பாகச் செயல்படுத்தப்பட உள்ளது.

கல்வித்துறையில் மேற்படிப்புகளுக்கான தேர்ச்சிகளை மேற்கொள்ள தேசிய அளவில் ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட உள்ளது. அதன் மூலம் வெவ்வேறு அமைப்புகள் தேர்வு நடத்துவது தவிர்க்கப்பட்டு, சீரான முறை உண்டாகும். உயர் கல்வித் துறையில் பல்கலைக் கழக மானியக் குழு சீரமைக்கப்பட்டு, திறமையாக இயங்கும் உயர்கல்வி நிறுவனங்களுக்குத் தன்னாட்சி அதிகாரம் கொடுக்கப்படும். அரசியல் கட்சிகள் பிறரிடமிருந்து நன்கொடை பெறும் முறையில் நேர்மையும் நம்பகத்தன்மையும் இல்லை. இனி மேல் இரண்டாயிரம் ரூபாய்க்கு மேல் யாரும் கணக்கில்லாமல் கட்சிகளுக்கு நன்கொடை கொடுக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியமான முடிவு. இதன் மூலம்  தூய்மையான அரசியலுக்கு ஒரு தொடக்கம் ஏற்பட்டுள்ளது என நம்பலாம்.

எனவே, இந்த நிதிநிலை அறிக்கையானது நாட்டின் ஒட்டுமொத்த நலனைக் கருத்தில் கொண்டு, சாதாரண மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கவும் உருவாக்கப்பட்டுள்ள ஒன்றாக உள்ளது. இதன் மூலம் நமது தேசம் சரியான வளர்ச்சிப் பாதையில் முன்னேறி, உலக அரங்கில் முக்கிய இடத்தைப் பிடிக்க வேண்டும்.

 

தேசபக்திக்கும் இடம்

ஆண்டொன்று போனால் பட்ஜெட் என்று ஒன்று வரும். அதை பொருளாதார நிபுணர்கள் பொதுஜனத்திற்குப் புரியாத வார்த்தைகள் போட்டு அலசுவார்கள். இந்த ஆண்டும் பட்ஜெட் (பாரத அரசின் வரவு செலவு திட்டம்) அறிவிக்கப்பட்டது. என்ன புதுசு? ஒன்று: பட்ஜெட் சமர்ப்பிப்பதிலும் தேசபக்தி எண்ணத்தை உயர்த்திப் பிடித்திருப்பது அனைத்துத் தரப்பார் மனதிலும் இடம் பிடித்துவிட்டது. அந்நிய அரசு இருந்த காலத்தில் பிப்ரவரி கடைசியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. அந்தப் பழக்கம் ஒழிக்கப்பட்டு பிப்ரவரி தொடக்கத்திலேயே தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இதனால் பட்ஜெட் அறிவிப்புகளை நடைமுறைப்படுத்துவதில் வேகம் அதிகரிக்கும். இரண்டு: ரயில்வே பட்ஜெட்டையும் பொது பட்ஜெட்டுடன் இணைத்திருப்பது இன்னொரு புதுமை. ரயில்வேயின் தனித்தன்மைக்கு பழுது வராமல், அதே சமயம் ரயில்வேயை தேசத்தின் பொருளாதார அரங்கில் நடுநாயகமாக்கியிருக்கிறார்கள். இதனால் ரயில்வேயை மற்ற போக்குவரத்து முறைகளோடு ஒருங்கிணைத்து  பயணிகளுக்கு பொருத்தமான வசதி செய்து கொடுப்பது சுலபமாகிறது. மூன்று: திட்டம் சார்ந்த செலவு, திட்டம் சாராத செலவு என்று இருந்த பழைய செலவினப் பாகுபாடு ஒழிக்கப்பட்டு முதலீட்டு செலவு, வருவாய்ச் செலவு என இரு புது வகைகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. காரணம் திட்டக் கமிஷன் என்ற அமைப்பு இப்போது கிடையாது.

– எஸ். குருமூர்த்தி,  ஆடிட்டர், பத்திரிகை ஆசிரியர்.

 

நேர்மைக்கு அங்கீகாரம்

இந்த பட்ஜெட்டில் ஏழை, எளிய மக்களுக்கு வீடு கட்டுவதற்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இது குடிசைப் பகுதியில் வசிப்பவர்களுக்கும் நிச்சயம் ஒரு வரப்பிரசாதமே. வீடுகள் கட்ட வசதியாக அரசாங்கம் ரூ. 12 லட்சம் வரை குறைந்த வட்டியில் கடன் தருவது வரவேற்கத்தக்கது.  வீடுகள் கட்டுவதால் வேலைவாய்ப்பும் பெருகும். வரிவிகிதத்தை குறைத்திருப்பது நேர்மையானவர்களுக்கு கிடைத்த ஒரு அங்கீகாரமாக கருதலாம். எனவே நிச்சயம் இது ஒரு வரவேற்கத்தக்க பட்ஜெட்.

– ஆர். ராமநாதன், தொழிலதிபர்

 

ஊடகத்தின் குரல்கள்

இந்த பட்ஜெட்டினால் விலைகுறையும் பட்டியலில் இணையவழி மூலமாக ரெயில் டிக்கெட் எடுத்தால் சேவை வரியில்லை. பணத்தை செலுத்துவதற்கான “ஸ்வைப்’ மெஷினுக்கு வரியில்லை என்பது போல வரிகுறைப்பு, வரிச்சலுகை இது போன்ற காரணங்களாலும், அன்றாட செலவில் பெரியபலன்கள் மக்களுக்கு எதுவுமில்லை.  பல வளர்ச்சிகளை ஓரளவுக்கு உள்ளடக்கிய பட்ஜெட் என்பதில் சந்தேகமில்லை. (தினத்தந்தி)

பட்ஜெட்டில் காட்டப்படும் வழிவகைகள் வரப்போகும், ஜி.எஸ்.டி., என்ற ஒரே மாதிரியான வரிவகைக்கு வழிகாட்டும் விதத்தில் இருக்கிறது. அதனால், வழக்கமான பட்ஜெட் அம்சங்களை தேடி, அதன் அடிப்படையில் குறை கூறுவதை விட, அதன் முக்கிய அம்சங்களுக்கு உள்ள நடைமுறைகளை நிதித்துறை கையாண்டு அமல்படுத்தும் விதத்தை மாநில அரசுகள் மட்டும் இன்றி அனைவரும் கவனித்தால் நல்லது. (தினமலர்)

செலாவணி செல்லாததாக்கும் முடிவால் அரசுக்கு  வரி வருவாய் அதிகரிக்கும் என்பதையும், வங்கிகளிடம் சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறைக்கு கடனுதவி வழங்குவதற்குக் கூடுதல் நிதியாதாரம் இருக்கப் போகிறது என்பதையும் நிதிநிலை அறிக்கையின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. (தினமணி)

இந்த பட்ஜெட்டில், விவசாயம், கிராமப்புற வளர்ச்சி, இளைஞர்கள் நலன், வேலைவாய்ப்பு, அடித்தளக் கட்டமைப்பு, சிறு-குறு-நடுத்தரத் தொழில்கள் வளர்ச்சி, டிஜிடல் விரிவாக்கம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் ஏற்பட்ட பாதிப்புகளை 3 மாதங்களுக்கும் மேல் சகித்துக்கொண்ட மக்களில் பலர் தொழில், வேலைவாய்ப்பு, வியாபாரம் ஆகிய வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர். அவர்களுடைய இழப்புகளை ஈடுகட்ட தனி நடவடிக்கை ஏதும் அறிவிக்கப்படவில்லை. (தி இந்து-தமிழ்)

 

விவசாயம் தலைதூக்க

விவசாயத் துறைக்கு என ரூ.1,81,223 கோடி அறிவித்திருப்பதும், விவசாயக் கடனுக்காக 10 லட்சம் கோடி அறிவித்திருப்பதும் நிச்சயம் விவசாயத் துறை செழிக்க உதவும். பாசனத்திற்காகவும் ரூ.60,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  புதிதாக கிராம சாலைகள் போடுவதற்கு திட்டம் உள்ளதால், கிராமங்கள் வேகமான வளர்ச்சி அடையும். நாடு முழுவதும் 648 இடங்களில் மண் வள அட்டை வழங்கப்படும். இதன் மூலம் விவசாயிகளுக்கு தங்கள் நிலத்தின் மண் பற்றியும் அதில் நன்கு விளையும் பயிர் பற்றியும் புரிதல் ஏற்படும்.

– இரா. சுந்தரம், ஆடிட்டர்