புதுடில்லி முதல்வர் இல்லம் கட்டுமான முறைகேடு வழக்கு விசாரணை

முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. புதுடில்லியில் முதல்வர் வசிக்கும் அதிகாரப்பூர்வ இல்லம், 1942ல் கட்டப்பட்டதால், கட்டடத்தை புதுப்பிக்கும் பணியை ஆம் ஆத்மி அரசு மேற்கொண்டது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் நடந்த இந்த மறுசீரமைப்பு பணியில், பல கோடி ரூபாய் அளவில் முறைகேடுகளும், விதிமீறல்களும் நடந்துள்ளதாக புதுடில்லி துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனா குற்றம்சாட்டினார்.

இது தொடர்பாக, கடந்த மே மாதம், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அவர் கடிதம் ஒன்றை எழுதினார். அதன் விபரம்: முதல்வர் இல்லம் மறுசீரமைப்பு குறித்து ஏப்., 27 மற்றும் மே 12ல் புதுடில்லி தலைமை செயலர் அளித்துள்ள உண்மை விளக்கும் அறிக்கைக்கு பின், பொதுப்பணித்துறை எவ்வாறெல்லாம் விதிமுறைகளை மீறியும், முறைகேடுகளில் ஈடுபட்டும் இந்த மறுசீரமைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளது என்பதை ஊடகங்கள் தெளிவாக சுட்டிக்காட்டி உள்ளன. மறுசீரமைப்பு என்ற பெயரில் இந்த பணி துவங்கப்பட்ட போதிலும், முதல்வர் இல்லம் முழுவதுமாக இடித்து புதிதாக கட்டப்பட்டுள்ளது. கட்டடத் திட்டங்களுக்குப் பொருந்தக்கூடிய விதிகளின்படி கட்டாய மற்றும் முன்தேவையான அனுமதியை, பொதுப்பணித் துறையின் கட்டடக் குழுவிடமிருந்து இதுவரையிலும் பெறவில்லை.முதலில் முதல்வரின் இல்லத்தில் கூடுதல் இடவசதியை ஏற்படுத்த அனுமதி கோரப்பட்டது.

ஆனால், ஏற்கனவே உள்ள கட்டடத்தை இடித்து, முற்றிலும் புதிய கட்டுமானத்திற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இந்த பணிக்கு 15–20 கோடி ரூபாய் செலவாகும் என்று கூறப்பட்ட நிலையில், அவ்வப்போது இந்த தொகை உயர்ந்து, இறுதியில் 53 கோடி ரூபாய் வரை செலவிடப்பட்டுள்ளது. இது, திட்டமிடப்பட்ட தொகையை விட மூன்று மடங்கு அதிகம். மேலும், 10 கோடி ரூபாய்க்கு மேல் நிதி அனுமதி வழங்கும் அதிகாரத்தை பெற்றுள்ள முதன்மை செயலரின் ஒப்புதலை தவிர்ப்பதற்காக, 10 கோடி ரூபாய்க்கும் குறைவான மதிப்பீடு காட்டி, அவ்வப்போது அனுமதி பெறப்பட்டுள்ளது.