பிரத்யேக பாதை அமைத்து கிராவல் மண் வெட்டி கடத்தல்

 

பல்லடம் அருகே பிரத்யேக வழித்தடம் அமைத்து, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான கிராவல் மண் வெட்டி கடத்தப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், பல்லடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட, அனுப்பட்டி, புளியம்பட்டி, கே.கிருஷ்ணாபுரம் ஊராட்சிகளுக்கு உட்பட்ட எல்லை பகுதிகளில், கனிம வள கடத்தல் ஜோராக நடந்து வருகிறது.

ஆள் அரவமற்ற காட்டுப்பகுதியில், ஏறத்தாழ, 100 அடி ஆழத்துக்கு மிகப்பெரிய பள்ளம் தோண்டப்பட்டு, பல ஆயிரம் யூனிட் கிராவல் மண் வெட்டி கடத்தப்பட்டுள்ளது. இரண்டு இடங்களில் இதுபோன்ற கிராவல் மண் வெட்டி எடுக்கப்பட்டதில், சுரங்கம் போன்று பள்ளங்கள் உருவாகியுள்ளன.

பொக்லைன், டிப்பர் லாரிகள் உள்ளிட்டவை வந்து செல்ல வசதியாக, காட்டுப்பகுதிக்குள் பிரத்யேக வழித்தடமும் உருவாக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில், அனுப்பட்டி, புளியம்பட்டி, கரடிவாவி வழியாக செட்டிபாளையம் ரோட்டில் அதிகப்படியான இதுபோன்ற கடத்தல் லாரிகள் செல்வது வாடிக்கையாக உள்ளது. இங்கு வெட்டி எடுக்கப்பட்ட கனிம வளங்கள், கேரளாவுக்கு கடத்தப்படுவதாக சந்தேகம் எழுந்துள்ளது கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான கனிம வளங்கள் கடத்தப்பட்டிருப்பது குறித்து, கனிம வளம், வருவாய் துறை மற்றும் போலீசார் உட்பட யாருக்கும் தெரியாதது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

பல்லடம் தாசில்தார் ஜெய்சிங் சிவகுமாரிடம் கேட்டதற்கு, ”கிராவல் மண் கடத்தல் குறித்து இதுவரை எந்த தகவலும் வரவில்லை. இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் மூலம் விசாரணை மேற்கொள்ளப்படும்” என்றார்.