‘பிரதமர் மோடியை ஏற்கும் கட்சிகளுக்கு பா.ஜ., கதவு எப்போதும் திறந்திருக்கும்’: அண்ணாமலை

”பிப்ரவரி இறுதிக்குள் பா.ஜ., கூட்டணி இறுதியாகி விடும்,” என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை, அமைந்தகரையில், பா.ஜ., மாநில தேர்தல் அலுவலகத்தை, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை நேற்று திறந்து வைத்தார். பா.ஜ., மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மாநில அமைப்பு பொதுச்செயலர் கேசவவிநாயகன், பா.ஜ., சட்டசபை குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன், மகளிரணி தேசியத் தலைவர் வானதி, எச்.ராஜா, முன்னாள் எம்.எல்.ஏ., வேலாயுதன், புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவர் தேவநாதன் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சட்டசபை தொகுதி வாரியாக நடந்து வரும், ‘என் மண்; என் மக்கள்’ யாத்திரை, 183 தொகுதிகளைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது. 200வது தொகுதியாக, வரும் 11ல், சென்னைக்கு யாத்திரை வர இருக்கிறது. அன்று மாலை நடக்கும் பொதுக் கூட்டத்தில், பா.ஜ., தேசியத் தலைவர் நட்டா பங்கேற்றுப் பேசுகிறார்.

அதைத்தொடர்ந்து, 234வது தொகுதி யாத்திரை, வரும் 25ம் தேதி திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் நடக்கிறது. அன்று மாலை 3:00 மணிக்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில், பிரதமர் மோடி பேசுகிறார். இதற்காக, 530 ஏக்கர் மைதானத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் நடக்கின்றன. ஐந்து லட்சம் இருக்கைகள் போடப்படவிருக்கின்றன. கூட்டத்தில், மொத்தம் 10 லட்சம் பேர் பங்கேற்பர்.

பிரதமர் மோடி, லோக்சபா தேர்தல் பிரசாரத்திற்காக, தென் மாவட்டங்களுக்கு வர வாய்ப்புள்ளது. கூட்டணி பேச்சு என்பது கடினமான ஒன்று. தி.மு.க., கூட்டணி அப்படியே உள்ளது என்கின்றனர். ஆனால், தொகுதிகளை ஒதுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர். கூட்டணி, தொகுதி பங்கீட்டை முடிவு செய்ய இன்னும் காலம் இருக்கிறது. பிரதமராக மோடியை ஏற்றுக் கொள்ளும் கட்சிகளுக்கு, பா.ஜ.,வின் கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது. இம்மாத இறுதியில் பா.ஜ., கூட்டணி இறுதியாகி விடும்.

கட்சியின் பார்லிமென்ட் குழு போட்டியிடச் சொன்னால், லோக்சபா தேர்தலில் போட்டியிடுவேன். வரும் லோக்சபா தேர்தல் வித்தியாசமானது. மூன்றாவது முறையாக மோடி ஆட்சி அமைக்கப் போவது உறுதியாகி விட்டது. மோடி மீதான அதீத நம்பிக்கையால் மாற்றுக் கட்சியினரும் பா.ஜ.,வுக்கு ஓட்டளிப்பர்.

எல்லாரும் திரும்பிப் பார்க்கும் அளவுக்கு எழுச்சியான ஓட்டு சதவீதத்தை, பா.ஜ., நிச்சயம் பெறும். அதிக தொகுதிகளில் வெற்றி பெறும். அ.தி.மு.க.,வினர் எங்களை விமர்சிப்பது பற்றி கவலை இல்லை. நாங்கள் யாருக்கும் எதிரிகள் அல்ல. பங்காளிகள் பகையாளியாக எங்களை நினைத்தால், நாங்கள் பொறுப்பல்ல. மோடி பிரதமராக நாங்கள் உழைக்கிறோம். கோவில் என்பது வெறும் வழிபாடுக்கு மட்டுமல்ல. கோவிலைச் சுற்றி பெரிய பொருளாதாரம் உள்ளது. வாரணாசி கோவில் சீரமைக்கப்பட்ட பின், ஓராண்டில் எட்டரை கோடி பேர் தரிசனம் செய்துள்ளனர்.

அயோத்தியில் சில நாட்களில், 25 லட்சம் பேர் தரிசித்துள்ளனர். அயோத்தி ராமர் கோவிலால், உ.பி., அரசுக்கு அடுத்த ஆண்டு 25,000 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும் என, ஆய்வறிக்கை சொல்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.