பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 5ம் தேதி நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது, பெரோஸ்பூர் மாவட்ட எஸ்.பி.,யாக இருந்த குர்பிந்தர் சிங், பிரதமர் நிகழ்ச்சியில் பாதுகாப்பு பணிகளை கவனித்து வந்தார்.
பிரதமர் கார் மற்றும் பாதுகாப்பு வாகனங்கள் வரும்போது, அவற்றை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். இதையடுத்து பிரதமரின் காரும், பாதுகாப்பு வாகனங்களும் நீண்ட நேரம் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்து, பாதி வழியிலேயே பிரதமர் மோடி, புதுடில்லி திரும்பினார். உள்ளூர் போலீசின் அலட்சியமே இதற்கு காரணம் என பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் குற்றம்சாட்டினர். இதுகுறித்து விசாரிக்க அதே ஆண்டு ஜனவரி 12ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. விசாரணை நடத்திய பஞ்சாப் டி.ஜி.பி., சமர்ப்பித்த அறிக்கையில், பதிண்டா மாவட்ட எஸ்.பி., குர்பிந்தர் சிங், தன் கடமையில் இருந்து தவறி விட்டதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இதையடுத்து, குர்பிந்தர் சிங்கை சஸ்பெண்ட் செய்து, பஞ்சாப் மாநில உள்துறை அமைச்சகம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், அவருடன் பணியில் இருந்த ஆறு போலீஸ் அதிகாரிகளும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இரண்டு டி.எஸ்.பி.,க்கள், இரண்டு இன்ஸ்பெக்டர்கள், தலா ஒரு சப் – இன்ஸ்பெக்டர் மற்றும் உதவி சப் – இன்ஸ்பெக்டர் ஆகியோர் இந்நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மாநில உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.