கர்நாடகா உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா, “கர்நாடகாவில் பி.எப்.ஐ, எஸ்.டி.பி.ஐ ஆகிய அமைப்பினர் மக்களிடையே திட்டமிட்டு பிரிவினைவாதத்தை பரப்பி வருகின்றனர். கடலோர கர்நாடாகாவில் மட்டுமல்லாமல் பெங்களூருவிலும் அவர்களால் மத ரீதியான மோதல்கள் நடந்தேறியுள்ளன. பெங்களூரு கலவரம், ஹிஜாப் பிரச்சினை ஆகியவற்றின் பின்னணியிலும் அவர்கள் இருந்தனர். அண்மையில் பி.எப்.ஐ, எஸ்.டி.பி.ஐ ஆகிய அமைப்புகளை சேர்ந்த இருவருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருந்தது கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டனர். அதன் தலைவர்களுக்கும் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக புகார் வந்ததால்தான் என்.ஐ.ஏ, அமலாக்கத்துறை அதிகாரிகள் தேசிய அளவிலான சோதனையை முன்னெடுத்தனர். இதன் மூலம் மத்திய அரசு இந்த அமைப்புகளுக்கு தடை விதிக்கும் பணிகளை தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது. கர்நாடகாவிலும் அவற்றை தடை செய்யுமாறு பல்வேறு அமைப்பினர் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதன் அடிப்படையில் அவ்ற்றை தடை செய்ய மாநில அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகளை விரைவில் தொடங்க இருக்கிறோம்” என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.